ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் மும்முரம்: கொக்கிரகுளம் தாமிரபரணி கரையில் நடைபாதை பூங்கா

நெல்லை: நெல்லை கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தாமிரபரணி நதிக்கரையில் நடைபாதை மற்றும் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே புதிய பஸ்நிலையம் புதுப்பிக்கப்பட்டு கூடுதல் பஸ்கள் நிறுத்தும் பாந்துகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் அறிவியல் மையமும் திறக்கப்பட்டுள்ளது. சாலை பஸ் நிறுத்தங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் வஉசி மைதானம் நவீன வசதிகளுடன் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதுவிரைவில் திறக்கப்பட உள்ளது. நேரு சிறுவர் பூங்காவில் ஆடிட்டோரியம், பொருட்காட்சி மைதானத்தில் தொழில் வர்த்தகமையம், டவுன் போஸ் மார்க்கெட் புதுப்பிப்பு உள்ளிட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நெல்லை கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகம் எதிரே தாமிரபரணி ஆற்றின் கரைப்பகுதியில் பூங்கா மற்றும் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. சுமார் 800 மீட்டர் தூரம் பள்ளம் பகுதி உயர்த்தப்பட்டு நவீன வசதிகளுடன் இப்பகுதி மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெறுகிறது.

Related Stories: