×

சிகரெட் புகைக்கும் ‘காளி’ லீனா மணிமேகலையை கைது செய்ய வலியுறுத்தல்

சென்னை: சிகரெட் புகைக்கும் ‘‘காளி’’யின் ஆவண படத்தின் போஸ்டர் வெளியிட்ட இயக்குநர் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் எனற ஹேஸ்டேக் டிவிட்டரில் ட்ரென்டாகி வருகிறது. சுயாதீன திரைப்பட இயக்குநரான லீனா மணிமேகலை, தேவதைகள், பறை, பலிபீடம் உள்ளிட்ட ஆவணப் படங்களையும், செங்கடல், மாடத்தி ஆகிய திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். தமிழ்நாட்டுக்கு தஞ்சம் புக வரும் ஈழ அகதிகளின் வலியை உணர்த்தும் வகையில் செங்கடல் படத்தை எடுத்த லீனா மணிமேகலை, மாடத்தி படத்தில் குறிப்பிட்ட சமூகத்துக்கு இழைக்கப்படும் சாதிய ஒடுக்குமுறைகளை பேசினார்.

மேலும் ஈழப்போராட்டம், சாதிய ஒடுக்குமுறைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண் உரிமைகள் தொடர்பாக இவர் எழுதிய கவிதைகள் பிரபலமானவை. இந்த நிலையில் அவர், காளி என்ற ஆவணப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த ஆவணப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் “காளி” என்ற தலைப்புடன் அதற்கு பின்னால் பெண் கடவுள் கையில் திரிசூலத்தையும் மறு கையில் சிகரெட்டையும் பிடித்திருக்கிறது. அத்துடன் ‘‘தன்பால் ஈர்ப்பாளர்கள்’’ சமூகத்தின் வானவில் கொடியும் அதில் காட்டப்பட்டு இருக்கிறது. இந்த போஸ்டர் வெளியானதிலிருந்தே சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு  வருகிறது.

ட்விட்டரில் அந்த புகைப்படத்தை பகிர்ந்த வலதுசாரிகள், பாஜக  ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்து மதத்தை  அவமதித்த லீனா மணிமேகலையை கைது செய்ய வலியுறுத்தி #ArrestLeenaManimekalai  என்ற ஹேஷ்டேக்கை அவர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக வி.எச்.பி  தலைவர் சாத்வி பிரக்யா உள்ளிட்டோரும் லீனா மணிமேகலையை கைது செய்ய  வலியுறுத்தி இருக்கின்றனர். இது குறித்து லீனா மணிமேகலை தனது டிவிட்டர் பதிவில் கூறும்போது, ‘‘ ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம்.

படத்தைப் பார்த்த பின்பு என்னை கைது செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள் தங்கள் கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பார்கள். அவ்வளவு இன வேற்றுமைகளுக்கு மத்தியிலும் வெறுப்பை தேர்ந்தெடுக்காமல் நேசத்தை தேர்ந்தெடுக்கிறதைப் பற்றிப் பேசுகிறாள் இந்தக் காளி. இன்னும் பேசுவாள்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

Tags : Kali' Leena Manimegala , Urge to arrest 'Kali' Leena Manimekalai who smokes cigarettes
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...