×

2-வது இன்னிங்சில் இந்தியா 125/3, புஜாரா ஒரு போர் வீரன்; முகமது சிராஜ் பேட்டி!

பர்மிங்காம்: கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 416 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிஷப் பன்ட் 146, ஜடேஜா 104 ரன் அடித்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன் 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2ம் நாள் ஆட்டநேரமுடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன் எடுத்திருந்தது. 3வது நாளான நேற்று அந்த அணி முதல் இன்னிங்சில் 284 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 106 ரன் அடித்தார்.

இந்திய பந்துவீச்சில் முகமது சிராஜ் 4, பும்ரா 2, ஷமி 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 132 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் சுப்மான் கில், ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரிலேயே 4ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த விகாரி 11ரன்னில் நடையை கட்டினார். விராட் கோஹ்லி தனது பங்கிற்கு 20 ரன் எடுத்து கேட்ச் ஆனார். மறுபுறம் நங்கூரம் போல் நின்று புஜாரா அரைசதம் அடித்தார். நேற்றைய 3ம்நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன் எடுத்திருந்தது. புஜாரா 50, ரிஷப் பன்ட் 30 ரன்னில் களத்தில் இருந்தனர். 7 விக்கெட் கைவசம் உள்ள நிலையில் 257 ரன் முன்னிலையுடன் இந்தியா இன்று 4வதுநாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

இந்தியா இன்று 400ரன்னுக்கு மேல் இலக்கு நிர்ணயித்து டிக்ளேர் செய்யும் வாய்ப்பு உள்ளது. நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் அளித்தபேட்டி: புஜாரா ஒரு போர்வீரன். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் இக்கட்டான நேரத்தில் சிறப்பாக ஆடினார். கடினமான சூழ்நிலையில், அவர் எழுந்து நின்று அணிக்கு பங்களிக்கிறார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய தொடர் மறக்க முடியாதது. அதேபோல் இதிலும் வெற்றி பெற்றால் மறக்க முடியாததாக இருக்கும். பேர்ஸ்டோ பார்மில் உள்ளார், நியூசிலாந்து தொடரில் இருந்து தொடர்ந்து தாக்குதல் பேட்டிங் விளையாடி வருகிறார். இதனால் நாங்கள் பொறுமையாக செயல்பட்டோம்.

இந்தியாவிடம் ‘140 கிமீ பிளஸ் வேக பவுலர்கள்’ இருப்பது ஒரு சாதகம், என்றார். அடிக்கடி மழைகுறுக்கீடு குறித்த கேள்விக்கு “மழை பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கிறது. இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் நல்லது. மூன்று நாட்களும் நாங்கள் சிறந்து விளங்கிய விதம் மற்றும் அவர்கள் மீது அழுத்தம் கொடுத்த விதம் மிகவும் நன்றாக இருந்தது, என்றார்.


Tags : India ,Pujara ,Mohammed Siraj , India 125/3 in 2nd innings, Pujara a warrior; Mohammed Siraj interview!
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...