×

இசட்-பிளஸ் பாதுகாப்பை மீறி மம்தா வீட்டில் நள்ளிரவில் பதுங்கிய மர்ம நபர் யார்? மேற்குவங்க போலீசார் அதிர்ச்சி

கொல்கத்தா: இசட்-பிளஸ் பாதுகாப்பை மீறி நள்ளிரவில் மேற்குவங்க முதல்வர் மம்தா வீட்டில் பதுங்கிய மர்ம நபர் குறித்து மேற்குவங்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இல்லம் தெற்கு கொல்கத்தாவின் ஹரிஷ் சாட்டர்ஜி தெருவில் உள்ளது. முதல்வர் மம்தாவுக்கு இசட் - பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் மர்ம நபர் ஒருவர், மம்தாவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அந்த நபர் அன்றிரவு முழுவதும் வீட்டிற்குள்ளேயே பதுங்கியிருந்தார்.

நேற்று அதிகாலை தான் பாதுகாப்பு போலீசின் கையில் அந்த நபர் சிக்கினார். இசட்-பிளஸ் பாதுகாப்பை தாண்டி முதல்வர் வீட்டிற்குள் மர்ம நபர் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிக பாதுகாப்பான இடத்தில் யாருடைய கண்ணிலும் படாமல் அந்த நபர் முதல்வர் இல்லத்திற்குள் நுழைந்தது மாநில போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து போலீஸ் மூத்த அதிகாரி கூறுகையில், ‘முதல்வர் இல்லத்திற்குள் மர்ம நபர் பதுங்கியிருப்பதாக புகார் கூறப்பட்டது. அந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

அந்த நபர் விளையாட்டுத்தனமாக முதல்வர் இல்லத்திற்குள் நுழைந்ததாக தெரிவித்தார். முதல்வர் வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து இரவைக் கழித்தார். அடுத்த நாள் காலையில் பாதுகாப்புப் பணியாளர்களால் அடையாளம் காணப்பட்டார். காளிகாட் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த நபரின் தோற்றத்தைப் பார்க்கும்போது, ​அவர் சற்று மனநிலை சரியில்லாதவராகத் தெரிகிறது. வேறு ஏதேனும் உள்நோக்கத்துடன் முதல்வர் இல்லத்திற்குள் அவரை நுழையுமாறு எவராவது அறிவுறுத்தினார்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். முதல்வர் இல்லம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம்’ என்றார்.

Tags : Mamata ,West Bengal Police , Who is the mysterious person who breached Z-Plus security and sneaked into Mamata's house in the middle of the night? West Bengal Police are shocked
× RELATED ராம நவமியின்போது பாஜ வன்முறையை தூண்டியது: முதல்வர் மம்தா குற்றச்சாட்டு