சமூக ஊடகங்களின் மூலமாக நீதிபதிகள் மீதான தனிப்பட்ட தாக்குதல்; ஆபத்தானவை நுபுர் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி வருத்தம்

புதுடெல்லி: சமூக ஊடகங்களின் மூலமாக நீதிபதிகள் மீதான தனிப்பட்ட தாக்குதல் மிகவும் ஆபத்தானவை என்று நுபுர் சர்மா மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பார்திவாலா  வருத்தத்துடன் பேசினார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா உச்ச  நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பார்திவாலா  மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அமர்வு விசாரித்தது. அப்போது நுபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்தால், அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க  வேண்டும் எனக்கூறி கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

நீதிபதிகளின் கருத்துகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் நீதித்துறைக்கும், நீதிபதிகளுக்கும் எதிராக பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் விழா ஒன்றில் பங்கேற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பார்திவாலா பேசுகையில், ‘நீதிமன்ற தீர்ப்புகள் தொடர்பாக சமூக ஊடகங்களின் மூலமாக நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை நோக்கி கொண்டு செல்கின்றன.

நீதிபதிகளின் தீர்ப்பு குறித்து தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துவது, ஊடகங்கள் என்ன நினைக்கிறது என்பதைவிட சட்டம் என்ன நினைக்கிறது என்பதை நீதிபதிகள் சிந்திக்க வேண்டிய ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் சட்டத்தின் ஆட்சிக்கு கேடு விளைவிக்கும். மேலும் நீதித்துறைக்கு தீங்கு விளைவிப்பதோடு அதன் கண்ணியத்தையும் குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்துகிறது.

அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடு முழுவதும் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களை நெறிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது’ என்று பேசினார்.

Related Stories: