தாராபுரம் இளம் பெண் சாவில் மர்மம் விசாரணை நடத்த கோரி உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகை

தாராபுரம் : தாராபுரம் அருகே இளம் பெண் சாவில் மர்மம் இருப்பதாகக்கூறியும், கோட்டாட்சியர் முறையான விசாரணை நடத்த வலியுறுத்தியும் வேண்டி அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.தாராபுரத்தை அடுத்த குள்ளாய்பாளையத்தைச் சேர்ந்தவர் சுகுமார்(30). கோழிப்பண்ணை உரிமையாளரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த லாவண்யா(27) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. லாவண்யாவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. இதன் பின்னர் கடந்த 15 நாள்களுக்கு முன் லாவண்யாவையும் குழந்தையையும் சுகுமார் தன் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இதையடுத்து, தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த லாவண்யா வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் கடந்த 2ம் தேதி குதித்ததாகவும். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவரது கணவர் சுகுமார் மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்து தேடியதாகவும், தேடி கண்டுபிடிப்பதற்குள் கிணற்று நீரில் மூழ்கி லாவண்யா உயிரிழந்ததாகவும் கணவர் சுகுமார் தரப்பில் கூறப்படுகிறது.

இத்தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த குண்டடம் காவல் துறையினர் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்நிலையில் லாவண்யாவின் தந்தை மாரியப்பன் தாராபுரம் கோட்டாட்சியர் குமரேசனிடம் நேரடி விசாரணையின் போது புகார் அளித்தார். அப்போது அவர், கடந்த 4 நாட்களாக லாவண்யாவின் உறவினர்கள் அவருடன் பேச செல்போன் மூலம் அழைத்த போதெல்லாம் அவரது கணவர் சுகுமார்தான் போனில் பதில் கூறினார் எனவும் லாவண்யா ஒருமுறை கூட தங்களுடன் பேசவில்லை என்றும் உண்மையில் அவர் பேசவில்லையா அல்லது பேச அனுமதிக்கப்படவில்லையா என்பதும், கிணற்றில் இருந்து உடலை மீட்கும் போது அவரது உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு இருந்ததாகவும் தங்களுக்கு சந்தேகம் ஏற்படுவதாகவும் இதனால் லாவண்யாவின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறினார்.

இந்நிலையில் லாவண்யாவின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் தாராபுரம் அரசு மருத்துவமனையை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது லாவண்யாவின் தற்கொலைக்குக் காரணமான அவரது கணவரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர். நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததன்பேரில் உறவினர்கள் அவரது உடலை பெற்றுச் சென்றனர்.

  இதுகுறித்து போலீசாரிடம் விசாரித்த போது இறந்த லாவண்யாவின் பிரேத பரிசோதனையின் முழு முடிவுகளும் கிடைத்த பின் அதில் சந்தேகப்படும் படியான நிகழ்வு நடந்திருந்தால் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் கூறினர்.

Related Stories: