திருக்கோயில்களில் அன்னை தமிழில் வழிபாட்டுக்கு பக்தர்களிடம் பெரும் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் 05.08.2021 அன்று அன்னை தமிழில் வழிபாடு என்ற பெயர் பலகையை வெளியிட்டார்கள். அதனை தொடர்ந்து, 47 முதுநிலை திருக்கோயில்களிலும் அன்னை தமிழில் வழிபாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் அன்னை தமிழில் வழிபாடு என்ற பெயர் பலகையை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் பக்தர்களின் பார்வைக்கு திறந்து வைத்தார்கள்.

அதன்பிறகு 12.08.2021 அன்று தமிழில் வழிபாடு செய்ய ஏதுவாகச் சிவன், அம்மன், விநாயகர், முருகன், பெருமாள், உள்ளிட்ட 12 இறைவன் போற்றி நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அனைத்து திருக்கோயில்களிலும் புத்தக விற்பனை நிலையத்தில் இந்நூல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். கடந்த 2022 -23 சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் வழிபாடு செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு கட்டணச் சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, இதற்கான வழிபாட்டுத் கட்டணத்தில் 60 சதவீதம் அர்ச்சகருக்குப் பங்குத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் தினசரி 150 பக்தர்களும், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 140 பக்தர்களும், பழனி அருள்மிகு தண்டாயுதபணி சுவாமி திருக்கோயிலில் 200 பக்தர்களும்,

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 180 பக்தர்களும், திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் 54 பக்தர்களும், கோவை, தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ர காளியம்மன் திருக்கோயிலில் 50 பக்தர்களும், திருச்சி, மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலில் 40 பக்தர்களும், பண்பொழி, அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலில் 38 பக்தர்களும், கரூர், தான்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்ட்ரமண சுவாமி திருக்கோயிலில் 33 பக்தர்களும், சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் 66 பக்தர்கள் உட்பட இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும், சுமார் 1500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னை தமிழில் வழிபாடு செய்ய பதிவு செய்து வருகிறார்கள்.

அன்னை தமிழில் வழிபாடு திட்டம் சீரிய முறையில் நடைபெற ஒவ்வொரு திருக்கோயில்களிலும் கண்காணிப்பு அலுவலர் (Nodal Oficer) நியமனம் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் திருக்கோயில்களில் தமிழ் வழிபாடு சிறப்பாக நடைபெறுவதால் அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் மனம் மகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

Related Stories: