×

தமிழகத்தை ஸ்மார்ட் மாநிலமாக மாற்றுவதே இலக்கு; தொழில் சிறந்திட உறுதுணையாக இருப்போம்: முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!!

சென்னை: முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு டெக்ஸ்பீரியன்ஸ் என்ற இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் நிதித் தொழில்நுட்ப தத்தெடுப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் டெக்ஸ்பீரியன்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 70,000 கோடியில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ரூ.22,252 கோடி மதிப்பீட்டில் 21 தொழில் திட்டங்களுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 17,654 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ரூ.1,497 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 12 நிறுவனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

ரூ.1.25 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து:

முதலமைச்சர் தலைமையில் சென்னையில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் ரூ.1.25 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1.25 லட்சம் கோடி முதலீடுகள் வருவதால் 74,898 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே திமுக அரசு சாதனை:

தொழில் தொடங்க சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 3ம் இடம் பிடித்துள்ளது மிகப்பெரிய வரலாற்று சாதனை. தொழில் தொடங்க சிறந்த மாநிலங்கள் பட்டியலில் 14ம் இடத்திலிருந்து 3ம் இடத்தை தமிழகம் பெற்றுள்ளது. ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்திலேயே தொழில்துறையில் இமாலய சாதனை செய்திருக்கிறோம்.

தமிழகத்தை ஸ்மார்ட் மாநிலமாக மாற்றுவதே இலக்கு:

தமிழகத்தை ஸ்மார்ட் மாநிலமாக உருவாக்குவதே அரசின் இலக்கு ஆகும். உலகுக்கே எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டை ஸ்மார்ட் நகரமாக மாற்றுவோம்.  ஓராண்டு காலத்தில் 6 முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது மிகப்பெரிய சாதனை. 10 நாட்களுக்கு முன்பு மேம்பட்ட உற்பத்தி தொடர்பான மாநாட்டை நடத்தினோம்.
தெற்காசியாவிலேயே தொழில் முதலீட்டுக்கு உகுந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம்.

தொழில் சிறந்திட உறுதுணையாக இருப்போம்:

தமிழ்நாடு அரசின் மீது நம்பிக்கை வைத்து பெரிய நிறுவனங்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொழில் நிறுவனங்களின் தொழில்கள் சிறக்க தமிழக அரசு உறுதுணையாக இருக்கும். தமிழகத்தில் ஒரு குடையின் கீழ் தொழில்நுட்ப சேவைகள் அளிக்கப்படும். மேட் இன் தமிழ்நாடு என தயாரிக்கப்பட்ட பொருட்கள் உலகின் மூலை, முடுக்கெல்லாம் சென்றடைய வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் குறிக்கோள்களை அடைய இன்போசிஸ் நிறுவனத்துடன் இணைந்து அரசு பணியாற்றுகிறது.

ஓராண்டில் ரூ.2.20 லட்சம் கோடியில் 192 ஒப்பந்தங்கள்:

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்தில் இதுவரை ரூ.2.20 லட்சம் கோடியில் 192 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காற்றாலை, மின் உற்பத்தி, சூரிய சக்தியோடு பசுமை ஹைட்ரஜன் தொழிற்சாலை தூத்துக்குடியில் கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து வகையான தொழில்களிலும் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தொழில் தொடங்க சிறந்த மாநில பட்டியலில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருந்து விரைவில் முதலிடத்தில் வர நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை நடந்த முதலீட்டாளர்கள் மாநாடுகளிலேயே மிகப்பெரிய மாநாடாக இது அமைந்துள்ளது. தொழில்துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு வளர வேண்டும். தமிழ்நாட்டின் அறிவாற்றலை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள நிறுவனங்கள் முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

தொழில்துறையை தங்கமாக மாற்றிய தங்கம் தென்னரசு:

தொழில்துறையை தங்கமாக மாற்றியுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். துணிச்சலாக செயல்படக் கூடிய தங்கம் தென்னரசுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் எனவும் முதல்வர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Principal ,CM ,K. Stalin , Tamil Nadu, smart state, industry, CM Stalin
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...