மாணவர்கள், பொதுமக்களுக்கு பாட்டு, சுவர் ஓவியப் போட்டி: திருத்தணி நகரமன்ற தலைவர் அழைப்பு

திருத்தணி:  திருத்தணி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செங்கல்பட்டு மண்டலம் சார்பில், நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி, மக்களின் ஒத்துழைப்புடன் நகரை தூய்மையாக வைத்துக் கொள்வது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் நகர்ப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, திருத்தணி நகராட்சி சார்பில் பாட்டு மற்றும் சுவர் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் திருத்தணி அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘’என் குப்பை எனது பொறுப்பு, கழிவுகளை பிரித்தல், நகரங்களின் தூய்மைக்கு மக்களின் பங்களிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பொதுமக்களிடம் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு நீர்நிலைகளை பாதுகாப்போம் ஆகிய தலைப்புகளில் பாடல்கள் இருக்கவேண்டும்.

செங்கல்பட்டு மண்டலத்துக்கு உட்பட்ட நகராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொள்ளலாம். சர்ச்சைக்குரிய கருத்து பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். பாடல்கள் இசையுடன் 3 நிமிடங்களில் இருந்து 5 நிமிடங்கள் வரை உள்ளதாக இருக்க வேண்டும். பாடலை வருகிற 6ம் தேதி மாலை 3 மணிக்குள் கீழ்க்கண்ட வலைதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சுவர் ஓவிய போட்டியில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் நகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டு ஓவியம் வரைவதற்கான இடம் மற்றும் முன் அனுமதி பெறவேண்டும்.

சுவர் ஓவியம் வரைவதற்கு முன்பும் பின்பும் எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதுடன் அதன் நகலினை நகராட்சி ஆணையரிடம் வருகிற 6ம் தேதிக்குள் நேரடியாக ஒப்படைக்க வேண்டும். போட்டிக்கான முடிவுகள் நடுவர்களின் இறுதி முடிவுக்கு உட்பட்டது. பாடல், சுவர் ஓவியப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 20 ஆயிரம், 2ம் பரிசு 10 ஆயிரம், 3ம் பரிசு 5 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசு ஐந்து பேருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும். போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு வருகின்ற 9ம் தேதி பரிசுகள் வழங்கப்படும்.

இந்த போட்டியில் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்று திருத்தணி நகரமன்ற தலைவர் சரஸ்வதி பூபதி அழைப்பு விடுத்துள்ளார். அப்போது நகராட்சி ஆணையர் ராமஜெயம் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: