75 ஆம்புலன்ஸ், 17 பேருந்துகள்: நேபாளத்துக்கு இந்தியா பரிசு

புதுடெல்லி: நேபாளத்துக்கு 75 ஆம்புலன்ஸ்கள், 17 பள்ளி பேருந்துகளை இந்தியா பரிசாக வழங்கி உள்ளது. இந்தியா இந்தாண்டு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா-நேபாளம் இடையிலான வலுவான, நீண்டகால நட்புறவை வலுப்படுத்தும் விதமாக, நேபாளத்துக்கு 75 ஆம்புலன்ஸ்கள், 17 பள்ளி பேருந்துகளை இந்தியா பரிசாக வழங்கி உள்ளது. இதற்கான சாவிகளை நேபாளத்துக்கான இந்தியாவின் புதிய தூதர் நவீன் வஸ்தவா, நேபாள கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் தேவேந்திர பவுடல் முன்னிலையில் காத்மாண்டுவில் நேற்று வழங்கினார்.

இது குறித்து இந்திய தூதர நவீன் வஸ்தவா கூறுகையில், ‘ஆம்புலன்ஸ்கள், பள்ளி பேருந்துகளை பரிசாக வழங்குவது இரு நாடுகளுக்கும் இடையிலான மிகவும் வலுவான நட்பின் ஒரு அங்கமாகும். சுகாதாரம்,  கல்வியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நேபாளத்தின் முயற்சிக்கு இந்தியா துணை நிற்கும்,’ என்று தெரிவித்தார். கடந்த 2021ம் ஆண்டில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், நேபாளத்துக்கு உதவும் வகையில் வென்டிலேட்டர்கள் பொருத்தப்பட்ட 39 ஆம்புலன்ஸ்களை இந்தியா பரிசாக வழங்கியது. 2020ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாளை முன்னிட்டு, 41 ஆம்புலன்ஸ்கள், 6 பள்ளி பேருந்துகள் பரிசாக வழங்கப்பட்டது.

Related Stories: