×

விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதியில் பவுஸ்கோவா: ஓஸ்டபென்கோ அதிர்ச்சி

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா தகுதி பெற்றார். 4வது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியாவுடன் (28 வயது, 55வது ரேங்க்) நேற்று மோதிய பவுஸ்கோவா (23 வயது, 66வது ரேங்க்) 7-5, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 23 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

மற்றொரு 4வது சுற்றில் களமிறங்கிய லாத்வியா நட்சத்திரம் யெலனா ஓஸ்டபென்கோ (25 வயது, 17வது ரேங்க்) 7-5, 5-7, 5-7 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் டட்ஜனா மரியாவிடம் (34 வயது, 103வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியடைந்தார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 8 நிமிடத்துக்கு நீடித்தது. இங்கிலாந்தின் ஹீதர் வாட்சன் 2-6, 4-6 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஜூலி நியமியரிடம் தோற்று காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தார்.

நடப்பு விம்பிள்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), ஜெஸ்ஸிகா பெகுலா, கோகோ காஃப், பார்போரா கிரெஜ்சிகோவா (செக்.), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), மரியா சாக்கரி (கிரீஸ்), கரோலினா பிளிஸ்கோவா (செக்.), பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா) உள்பட முன்னணி வீராங்கனைகள் பலர் தொடர்ச்சியாக அதிர்ச்சி தோல்வி கண்டு ஏமாற்றத்துடன் வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது.

பெடரருக்கு வரவேற்பு: சுவிஸ் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்து வருகிறார். விம்பிள்டனில் 8 முறை சாம்பியனான அவர் நேற்று ஜோகோவிச் மோதிய 4வது சுற்று ஆட்டத்தை பார்க்க வந்தபோது, ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Tags : Bouskova ,Wimbledon ,Ostapenko , Wimbledon tennis, Bouskova, Ostapenko
× RELATED அடிலெய்டு சாம்பியன்கள்