அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘டிஎன் டாக்’ என்ற பெயரில் அறிஞர், வல்லுநர்கள் உரை நிகழ்த்த ரூ.37.50 லட்சம்: அரசாணை வெளியீடு

சென்னை: அண்ணா நூற்றாண்டு  நூலகத்தில் அறிஞர்கள், வல்லுநர்கள் உரை நிகழ்த்த தேவைப்படும் நிதிக்காக, ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை: 2022-2023ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறையின் மானிய கோரிக்கையின்போது, வெளியிடப்பட்ட அறிவிப்பில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின்  ஒருங்கிணைப்பில் சர்வதேச அளவில் பல்துறை நிபுணர்கள், அறிவியல் ஆய்வாளர்கள், புகழ்பெற்ற அறிஞர்களின் உரைகள் மிக சிறந்த தொழில் நுட்பம், மற்றும் அரங்க அமைப்புடன் ‘TN talk’ என்ற பெயரில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, டிஎன் டாக் என்ற நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் 25 நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தனித்துவம் மிக்க இந்த நிகழ்வில் மிக சிறந்த பேச்சாளர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் நடத்தப்படும். இலக்கியம், பொருளாதாரம், கல்வி, தொல்லியல், மருத்துவம், அறிவியல் போன்ற ஒவ்வொரு துறை சார்ந்த புகழ் பெற்ற மிக சிறந்த ஆளுமைகள் அழைக்கப்பட்டு பேசுவார்கள். புகழ் பெற்ற பல்கலை கழகங்கள், கல்லூரிகள், அரசு நிறுவனங்களுடன் இணைந்து  நடத்தப்படும். இந்த நிகழ்வுகள் பொது நூலகத்துறையின் இயக்குநர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இந்த நிகழ்வு ஒன்றுக்கு தலா ரூ.1 லட்த்து 50 ஆயிரம் என்ற வகையில் 25 நிகழ்வுகளுக்கு ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் செலவாகும் என்றும் அதை செலவினத்துக்கான தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் இயக்குநர் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார். பொது நூலகத்துறை இயக்குநரின் கருத்துருவை கவனமுடன் பரிசீலனை செய்த அரசு அதை ஏற்று, ரூ. 37 லட்சத்து 50 ஆயிரத்தை நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குகிறது.

Related Stories: