அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.5 கோடி வரை கொடுத்து பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க பண மூட்டையுடன் அலைகிறார்கள்: டிடிவி தினகரன் கடும் தாக்கு

சேலம்: அதிமுகவில்  பொதுச் செயலாளர் பதவியை பிடிக்க பணமூட்டைகளுடன் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என இபிஎஸ் மீது டிடிவி.தினகரன் குற்றம்சாட்டினார். சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த அமமுக செயல்வீரர்கள் கூட்டம் கொண்டலாம்பட்டியில் நேற்று நடந்தது. இதில் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் பங்கேற்று பேசியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இருந்த பொறுப்பில் அமருவதற்கு அரக்கர்கள் போல் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். பணமூட்டைகளுடன் பதவியை பிடிக்க அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதிமுக பொதுக்குழுவில் ஒருவர் தனக்கு 97 சதவீதம் ஆதரவு உள்ளது என்று கூறுகிறார். மற்றொருவர் அந்த பதவிக்கு அவர் வருவதை தடுக்க முயல்கிறார். அதிமுக பொதுகுழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு ரூ.25 லட்சம் முதல் ஐந்து கோடி வரை பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் பதவி அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எழுதி வைத்துச் சென்றுள்ளனர். எந்த ஒரு விதியையும் பொதுக்குழுவின் மெஜாரிட்டியை வைத்து திருத்தலாம். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவியை கட்சியின் அடிப்படை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய முடியும். இதனை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் செய்து வைத்துள்ளனர். இப்போது அதிமுகவை யார் அழிக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும். பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற பெயரில் குள்ளநரி கூட்டம் உள்ளது. அவர்களுக்கு பல கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் துரோகிகள் கூட்டத்தில் மாட்டிக்கொண்டு வீழ்ந்து வருகிறார்.

பொதுக்குழு கூட்டத்தில் தைரியமாக, கூலிப்படையினர் நடுவே சென்று ஓபிஎஸ் தரப்பினர் அந்த கூட்டம் செல்லாது என்று கூறி வந்துள்ளனர். அவர்களை பாராட்டுகிறேன். அதிமுக மூழ்கும் கப்பலாக உள்ளது.மீண்டும் பொதுக்குழுவை கூட்டி 3000 பேரை வைத்துக் கொண்டு பொதுக்குழுவில் ஒற்றை தலைமையோ அல்லது பொது செயலாளராகவோ பதவியேற்று குறுக்கு வழியில் அமர பார்க்கிறார்கள். சட்டமன்ற தேர்தலில் பல ஆயிரம் கோடி செலவு செய்துதான் மேற்கு மண்டலத்தில் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால் தற்போது சொந்த நகராட்சியில் கூட வெற்றி பெறமுடியவில்லை என்றார்.

Related Stories: