பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 2 பெண்கள் கைவரிசை பிறந்த 4 நாளில் பச்சிளம் பெண் குழந்தை கட்டைப்பையில் போட்டு கடத்தல்: 6 தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த 4 நாளில் பச்சிளம் பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் யூனிஸ் (28).  இறைச்சிக்கடைக்காரர். இவரது மனைவி திவ்யபாரதி (25). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் திவ்யபாரதி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான திவ்யபாரதி கடந்த 27ம் தேதி பொள்ளாச்சி அரசு  மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். 29ம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாய்-சேய் வார்டில் குழந்தையை கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு திவ்யபாரதி குழந்தையுடன் தூங்கினார்.

நேற்று அதிகாலை 4.50 மணி அளவில் திவ்யபாரதி எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கணவர் யூனிஸ்க்கு தகவல் கொடுத்தார். அவர் உறவினர்களுடன் மருத்துவமனைக்கு வந்து குழந்தையை தேடியும் கிடைக்கவில்லை. தகவலறிந்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனை முன்பு நின்ற ஒருவரிடம் விசாரித்தபோது 2 பெண்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து சிறிது நேரத்தில் கையில் கட்டைப்பையுடன் திரும்பி அங்கு நின்ற ஆட்டோவில் ஏறிச் சென்றதாக கூறினார். மருத்துவமனையில் கண்காணிப்பு கேமரா இல்லை.

எனவே போலீசார் உடுமலை ரோடு தேர்நிலை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோ ஒன்று விரைவாக கடந்து சென்றது பதிவாகி இருந்தது. இதையடுத்து  போலீசார் அப்பகுதிகளில் ஆட்டோக்களில் சோதனை மேற்கொண்டனர். குழந்தையை கடத்திச் சென்ற 2 பெண்களை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் எஸ்பி பத்ரிநாராயணன் நேற்று மாலை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரித்தார். பின்னர் குழந்தையை மீட்கவும், கடத்தியவர்களை பிடிக்கவும் 6  தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் வலை வீசி தேடி வருகிறார்கள். இச்சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: