×

ராகுல் காந்தி அலுவலகம் மீது தாக்குதல் வயநாடு மாவட்ட மாணவர்கள் கூட்டமைப்பு அதிரடி கலைப்பு: கேரளாவில் மாநில கமிட்டி நடவடிக்கை

திருச்சூர்: கேரளாவில் ராகுல் காந்தியின் எம்பி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய இந்திய மாணவர் கூட்டமைப்பின் வயநாடு மாவட்ட பிரிவை , இந்த கூட்டமைப்பு மொத்தமாக கலைத்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவில் உள்ள வயநாடு தொகுதி எம்பி.யாக இருக்கிறார். இங்கு அவருடைய எம்பி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, வனப்பகுதிகளை சுற்றிலும் பாதுகாப்பு மண்டலங்களை அமைக்கும்படி  முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  ஆட்சியை நிர்ப்பந்தம் செய்யும்படி வலியுறுத்தி, கடந்த மாதம் 24ம் தேதி  இந்திய மாணவர் கூட்டமைப்பினர் பேரணி நடத்தினர்.

அப்போது, ராகுல் காந்தியின் அலுவலகத்தின் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி, சேதப்படுத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முதல்வர் பினராயும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இது பற்றி விசாரிப்பதற்காக உயர்மட்ட போலீஸ் குழுவையும் நியமித்தார். இருப்பினும், கேரளாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ள ராகுல் காந்தி, தாக்கப்பட்ட தனது அலுவலகத்தை நேற்று முன்தினம் பார்வையிட்டார். அப்போது, தாக்குதல் நடத்திய  மாணவர் கூட்டமைப்பினரை மன்னிப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்ட வயநாடு மாவட்ட இந்திய மாணவர் கூட்டமைப்பு பிரிவை கலைப்பதாக, இந்த கூட்டமைப்பின் மாநில தலைமை  அறிவித்துள்ளது. இடைக்காலமாக இந்த மாவட்ட பிரிவை நிர்வாகம் செய்வதற்காக 7 பேர் கொண்ட இடைக்கால குழுவையும் அது நியமித்துள்ளது.

Tags : Rahul Gandhi ,Wayanad District Students Federation ,Dissolution ,Kerala , Attack on Rahul Gandhi's office Wayanad District Students Federation Action Dissolution: State Committee Action in Kerala
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...