×

பாஜ.வின் ஜனநாயக நம்பகத்தன்மை குறித்து கேள்வி எதிர்க்கட்சிகளுக்கு மோடி பதிலடி: பாஜ செயற்குழு கூட்டத்தில் பேச்சு

ஐதராபாத்: ‘பாஜ.வின் ஜனநாயக நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள், முதலில் அவர்களின் கட்சியில் எப்படிப்பட்ட ஜனநாயகம் நிலவுகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்,’ என பாஜ செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பாஜ கட்சியின் 2 நாள் செயற்குழு கூட்டம் தெலங்கானாவின் ஐதராபாத்தில் நடந்தது. தென் இந்தியா மீது குறிவைத்துள்ள பாஜ, அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள தெலங்கானாவில் ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சி செய்கிறது. இதனால், 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐதராபாத்தில் இக்கட்சியின் செயற்குழு கூட்டம் மிக பிரமாண்டாமாக நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முக்கிய தலைவர்களும், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 12 பாஜ முதல்வர்கல் உட்பட 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில், எதிர்வரும் மாநில தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவை தேர்தல் குறித்தும், அதற்கான வியூகங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், கட்சியின் செயல்பாடுகள், ஒன்றியத்தில் பாஜ ஆட்சியின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தென் இந்தியாவில் குறிப்பாக தெலங்கானாவில் பாஜ கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் படுகொலை செய்யப்பட்ட தையல்காரர் கன்னையா குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

2வது மற்றும் கடைசி நாளான நேற்று பிரதமர் மோடி கூட்டத்தில் நிர்வாகிகளிடம் ஆற்றிய உரையில் கூறியதாவது: சிறந்த இந்தியாவை உருவாக்க, கட்சி தொண்டர்கள் பாடுபட வேண்டும். எதிர்க்கட்சிகளைப் போல் சமரச அரசியலில் ஈடுபடாமல், அனைவருக்குமான தேவைகளை பூர்த்தி செய்யும் ஆரோக்கியமான அரசியலை செய்ய வேண்டும். இது அனைவரின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். நாட்டில் எந்த ஒரு நபரும் பின்தங்கியிருக்கக் கூடாது. பாஜ தொண்டர்கள் சேவை, சமத்துவம், கட்டுப்பாடு, ஒருங்கிணைப்பு, நேர்மறை குணங்களை கொண்டிருக்க வேண்டும். கட்சி தொண்டர்கள் மக்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும்.

இதற்காக சமூகத்தில் ஒருங்கிணைப்பை அதிகரிக்க, ‘நட்பு யாத்திரை’களை நடத்த வேண்டும். குடும்ப அரசியல், வாரிசு கட்சிகளைப் பார்த்து மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். அவர்கள் நீண்ட காலம் தாக்கு பிடிக்க முடியாது. இறுதிகட்ட வீழ்ச்சியில் இருக்கும் கட்சிகளை நாம் கேலி செய்யக் கூடாது. மாறாக அவர்களின் தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும். பாஜ.வின் ஜனநாயக நம்பகத்தன்மை பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. அதற்கு முன்பாக, அவர்களின் கட்சியில் உள்ள  ஜனநாயகத்தின் நிலை என்ன? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும், தெலங்கானா, மேற்கு வங்கம், கேரளாவில் பாஜ கட்சி வேகமாக பலமடைந்து வருவதாகவும், அதற்காக கட்சி தொண்டர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.

* அனைத்து மக்களிடமும் நேர்மறையான மாற்றம்
பாஜ செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து, பரேட் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வரவும், மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவும் ஒன்றிய பாஜ அரசு கடுமையாக உழைத்து வருகிறது. பாஜ மீதான தெலங்கானா மக்களின் அன்பை மனதில் வைத்துதான் செயற்குழு கூட்டம்  ஐதராபாத்தில் நடத்தப்பட்டது. தெலங்கானா மக்கள் ‘இரட்டை இன்ஜின்’ வளர்ச்சிக்காக (ஒன்றியத்திலும், மாநிலத்திலும் பாஜ ஆட்சி) ஏங்குகின்றனர். இங்கு பாஜ ஆட்சிக்கு வந்ததும், அனைத்து நகரங்களும், கிராமங்களுக்கும் மிக விரைவாக வளர்ச்சி அடையும்,’’ என்றார்.

* சிக்கிய உளவு அதிகாரி
பாஜ தேசிய செயற்குழு கூட்டத்தில் நேற்று காலை தெலங்கானா மாநில உளவுத்துறை அதிகாரி ஒருவர் ஊடுருவி, கூட்டத்தின் வரைவு தீர்மானங்களை செல்போனில் படம் பிடித்தபோது பிடிபட்டார். அவரை போலீசாரிடம் பாஜ.வினர் ஒப்படைத்தனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

* அடுத்த 40 ஆண்டுகள் அசைக்க முடியாது
செயற்குழுவில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘அடுத்தடுத்த தேர்தல்களில் பாஜ தொடர்ந்து வென்று வருவது, எங்களின் வளர்ச்சி மற்றும் செயல்திறன் சார்ந்த அரசியலை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றே அர்த்தம். அதே சமயம் குடும்ப ஆட்சி, சாதி, சமாதான அரசியலுக்கு முடிவு கட்டப்படுகிறது என்பதும் தெளிவாகிறது. இது தென் இந்தியாவிலும் நடக்கும். அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் வரை பாஜ.வின் சகாப்தம் தான் நிலவும். பாஜவின் அடுத்த கட்ட வளர்ச்சி தென் இந்தியாவில் இருந்து தொடங்கும் என்பதற்கான நம்பிக்கையையும், சாத்தியக்கூறுகளையும் ஐதராபாத் செயற்குழு கூட்டம் காட்டி உள்ளது’’ என்றார்.

* ‘புலி வரும் போது நரிகள் ஓடி விடும்’
பிரதமர் மோடி தெலங்கானாவுக்கு வரும்போது, மரபுபடி அவரை இம்மாநில முதல்வர் வரவேற்க வேண்டும். ஆனால், மோடி வரும்போது எல்லாம் இம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் வரவேற்க செல்வது இல்லை. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க நேற்று முன்தினம் மோடி வந்தபோதும் அவர் வரவேற்காமல் புறக்கணித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜ. தலைவர்கள், ‘புலி வரும் போது குள்ளநரிகள் ஓடிவிடும்,’ என விமர்சித்துள்ளனர்.

* ஐதராபாத் பெயர் மாற்றமா?
பாஜ செயற்குழுவில் பேசிய பிரதமர் மோடி, ஐதராபாத்தை ‘பாக்யநகர்’ என குறிப்பிட்டார். கடந்த 2020ம் ஆண்டு ஐதராபாத் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது பிரசாரத்தின் போது, ஐதராபாத் நகரின் பெயரை பாக்யநகர் என பெயர் மாற்றம் செய்வோம் என பேசினார். தற்போது பிரதமர் மோடியும் அந்த பெயரை பயன்படுத்தி உள்ளதால், இது குறித்து ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘‘தெலங்கானாவில் பாஜ தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, முதல்வர் தனது அமைச்சரவையுடன் பேசி முடிவெடுப்பார்’’ என்றார்.

* அனுமதியின்றி பேனர் பாஜவுக்கு அபராதம்
பாஜ செயற்குழு கூட்டம், எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சி்ன்காவை ஆதரித்து, ஐதராபாத் நகரம் முழுவதும் பாஜ மற்றும் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் விதிகளை பேனர், கட் அவுட்கள் வைத்திருந்தனர். இந்நிலையில், அனுமதியின்றி பேனர் வைத்ததாக பாஜவுக்கு ரூ.20 லட்சமும், டிஆர்எஸ் கட்சிக்கு ரூ.3 லட்சமும் ஐதராபாத் மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது.

* காரசாரமான உணவு
பாஜ செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது மட்டுமல்ல, அதில் பங்கேற்வர்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளும் விசேஷமானதாகவே இருந்தது. கூட்டத்தை நடத்தும் பொறுப்பை கவனித்த தெலங்கானா மாநில பாஜ தலைவரும், எம்பி.யுமான பண்டிட் சஞ்சய், அம்மாநிலத்தின் பெண் சமையல் கலைஞர் யாதம்மா குழுவினரை சமையல் பணிக்கு நியமித்திருந்தார். 50 வகையான சிறப்பு உணவுகள் சமைக்கப்பட்டன. 5 நட்சத்திர ஓட்டல் சாப்பாட்டை சாப்பிட்டு வந்த தலைவர்களுக்கு, தெலங்கானாவின் காரசாரமான சிறப்பு உணவுகள் மற்றும் இனிப்பு வகைகள் சமைத்து தந்து அசத்தினர். இந்த மெனு லிஸ்டில் மாம்பழ தால் (பருப்பு கூட்டு), தக்காளி-பீன்ஸ் குழம்பு, ஆலு குருமா, கார கத்திரிகாய், கோவக்காய் பொரியல், முந்திரி, கடலை பொரித்த ஓக்ரா, வெந்தயம், சிறு பருப்பு ப்ரை, பிரியாணி, புளியோதரை, புதினா சாதம், தயிர் சாதம், கோங்குரா ஊறுகாய், வெள்ளரிக்காய், தக்காளி, சுரைக்காய் சட்னி என பல்வேறு வகை கார சமையல்களை தலைவர்கள் ருசித்து சாப்பிட்டனர்.

Tags : Modi ,BJP ,BJP Executive Committee , Modi's response to opposition parties questioning BJP's democratic credibility: Speech at BJP Executive Committee meeting
× RELATED ராதிகாவுக்கு ‘சீட்’ புலம்பும் குஷ்பு: ஓரங்கட்டும் பாஜ