ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் இனிப்பு ஊட்டியது சரியா?: நினைவுகளை பகிர்ந்து கொண்ட சரத்பவார்

மும்பை: ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் இனிப்பு ஊட்டியது குறித்து தனது பழைய நினைவுகளை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பகிர்ந்து கொண்டார். மகாராஷ்டிரா முதல்வராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும் வியாழக்கிழமை  பதவியேற்றனர். இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அளித்த பேட்டியில், ‘ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸின் பதவியேற்பு விழாவை தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர் (ஆளுநர்) அவர்களுக்கு இனிப்பு ஊட்டிவிட்டு, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியதையும் பார்த்தேன். இதுபோன்று நான் எங்கும் பார்த்ததில்லை.

ஆளுநரின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் இருப்பதாக தெரிகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தல் முடிவுக்குப் பிறகு, மகா விகாஸ் அகாதி தலைவர்களின் பதவியேற்பு விழா நடந்தது. நானும் அந்த விழாவில் இருந்தேன். சில அமைச்சர்கள் அவர்களின் சிந்தாந்த அடிப்படையிலான சின்னங்கள் அல்லது நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு பதவியேற்றனர். அதற்கு ஆளுநர் கோஷ்யாரி எதிர்ப்பு தெரிவித்தார். உறுதிமொழியை உரிய விதிமுறைகளின்படி எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இருப்பினும் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றபோது, ​​மறைந்த பால் தாக்கரே மற்றும் மறைந்த ஆனந்த் திகே ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டார்.

ஆனால் ஆளுநர் கோஷ்யாரி இந்த நடைமுறையை எதிர்க்கவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகளின் பின்னணிகளைக் கொண்ட பிரதிநிதிகள் பதவியேற்கும் போது, ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. மாநில அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகள் ஆளுநரைக் கட்டுப்படுத்தும். ஆளுநரின் ஒதுக்கீட்டில் 12 பேரை சட்ட மேலவை உறுப்பினர்களாக நியமிக்க முந்தைய மகா விகாஸ் அகாதி அரசு பரிந்துரை செய்தது. ஆனால், அந்த பட்டியலை அவர் அங்கீகரிக்கவில்லை. தற்போதைய புதிய அரசுக்கு தேவையான முடிவுகளை விரைவாக எடுப்பார் என்று கூறப்படுகிறது’ என்று கிண்டலாக கூறினார்.

Related Stories: