×

அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றபடும்; நத்தம் விஸ்வநாதன் பேட்டி

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றபடும் என ஈபிஎஸ் ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். சென்னை, அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த 23 ஆம் தேதி நடத்தப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். இந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது குறித்து சென்னையில் கடந்த 14 ஆம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதிமுகவை முன்பு போல விறுவிறுப்பாக செயல்பட வைக்க ஒற்றை தலைமை முறையே சிறந்தது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவில் பிரச்சினை வெடித்தது.  இந்தநிலையில் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுவை நடத்தும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற இடத்தை ஆய்வு செய்த பின் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.

23 தீர்மானங்களில் ஒரு சில தீர்மானங்கள் தவிர்த்து பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவியே தற்போது இல்லை. பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதில் எந்த சட்டச்சிக்கலும் இல்லை. சட்டவிதிகளின் படி பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெறும். சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் பொதுக்குழுவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஜூலை 11-ல் பொதுக்குழுவில் 99% நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். ஈபிஎஸ்க்கு 99% நிர்வாகிகள் ஆதரவு உள்ளது. ஓபிஎஸ்க்கு 1% நிர்வாகிகளே ஆதரவாக உள்ளனர் என்றார்.

Tags : Edappadi Palaniswami ,General Secretary ,AIADMK General Committee ,Natham Viswanathan , The resolution to elect Edappadi Palaniswami as General Secretary will be passed in the AIADMK General Committee; Interview with Natham Viswanathan
× RELATED எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்