பூஜை செய்து தருவதாக 7 சவரன் நகை அபேஸ்: பூசாரியிடம் விசாரணை

பெரம்பூர்: கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் சரிதா (41), கோகிலா (45), ரதி (40), அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (38). நண்பர்களான இவர்கள் வீட்டிற்கு, கடந்த வருடம் அக்டோபர் மாதம் வடபழனியை சேர்ந்த பூரண பிரகாஷ் (46) என்பவர் சென்று, ‘வீட்டில் உள்ள நகைகளை சொர்ண அபிஷேகம் செய்து, 48 நாட்கள் பூஜை செய்தால், உங்களிடம் அதிகமாக தங்கம் சேரும்,’ என கூறியுள்ளார். இதனை நம்பி சரிதா அரை சவரன் தங்கமும், சரஸ்வதி 2 சவரன் தங்கமும், கோகிலா 3.5 சவரன் தங்கமும், ரதி 1 சவரன் தங்கமும் என 7 சவரன் தங்க நகைகளை பூர்ண பிரகாஷிடம் கொடுத்துள்ளனர். பின்னர், 48 நாட்கள் கழித்து நகையை கொடுத்தவர்கள் அவரிடம் திருப்பி கேட்டபோது, ஏதாவது ஒரு காரணம் சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த மேற்கண்ட 4 பேரும், நேற்று ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் சொர்ண அபிஷேகம் செய்து நகைகளை திருப்பி தருவதாக கூறி எங்களது 4 பேரிடமும் நகைகளை வாங்கி ஏமாற்றிய பூரண பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், பூரண பிரகாஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: