×

வணிக வரி செலுத்தாத டீலர்களுக்கு அபராதம்: அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி

மதுரை: வணிக வரி செலுத்தாத டீலர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி கூறினார். மதுரை ஒத்தக்கடை அருகே உலகநேரி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் பல்வேறு தொழில் திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி அளித்த பேட்டி: வணிக வரி கட்டாத 3 லட்சத்திற்கும் மேற்பட்ட டீலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பியதன் விளைவாக ரூ.67 கோடி அளவில் வணிக வரி வசூலிக்கப்பட்டுள்ளது. வணிகவரி செலுத்தாத டீலர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதியோர்கள் பத்திரப்பதிவு செய்ய வந்தால் அவர்களை காத்திருக்க வைக்கக்கூடாது. முதியோர்களை காத்திருக்க வைக்கும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். போலி பத்திரங்களை பதிவாளர்களே ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் சட்ட முன்வடிவிற்கு ஒன்றிய அரசு ஒரு மாதத்தில் ஒப்புதல் அளிக்கும். ஆன்மிக விவகாரத்தில் யாருடைய தனிப்பட்ட உரிமையிலும் முதல்வர் தலையிடுவதில்லை. திமுகவிலும் ஆன்மிகவாதிகள் உள்ளனர். தமிழகத்தில் மதத்தை வைத்து தவறான அரசியல் நடத்தி விடக்கூடாது என்பதே எங்களின் எண்ணம். மக்களின் தனிப்பட்ட உரிமைகளை நிலைநாட்டுவதே திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Minister ,B. Murthy , Penalty for dealers who do not pay business tax: Minister B. Murthy interview
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...