வேலூரில் பயிற்சி முடித்த 4 மாநில சிறை அதிகாரிகளுக்கு சான்றிதழ்: மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினார்

வேலூர்: வேலூர் ஆப்காவில் 37வது அணி பயிற்சி முடித்த 4 மாநிலங்களை சேர்ந்த சிறை அதிகாரிகளுக்கு சான்றிதழ், கேடயத்தை மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா வழங்கினார். வேலூர் ஆப்காவில் (சிறை நிர்வாகம் மற்றும் சிறை சீர்த்திருத்தம்) 37வது அணி சிறை அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா மற்றும் 38வது அணி அதிகாரிகளுக்கான பயிற்சி தொடக்க விழா நேற்று நடந்தது. ஆப்கா இயக்குநர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா பங்கேற்று, 37வது அணியில் பயிற்சியை நிறைவு செய்த தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த 25 சிறை அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் பயிற்சியின்போது சிறப்பாக செயல்பட்ட சிறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கினார். நேற்று தொடங்கிய 38வது அணி பயிற்சியில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 20 சிறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: