முதல்வர் பைரன் சிங் அதிர்ச்சி தகவல் மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கிய 80 பேரும் பலி: சடலங்கள் மட்டுமே மீட்பு

இம்பால்: மணிப்பூரில் நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்களான நிலையில், மண்ணில் புதைந்த 80 பேரும் பலியாகி இருக்கக் கூடும் என்று இம்மாநில முதல்வர் பைரன் சிங் வேதனை தெரிவித்துள்ளனர். நேற்று வரையில் 25 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் 18 பேர் ராணுவ வீரர்கள். மணிப்பூரில் ேநானி மாவட்டத்தில் துபுல் யார்டு அருகே ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள பகுதி என்பதால், இவர்களுக்கு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்து வந்தனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு இங்கு ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில், ராணுவ வீரர்கள், தொழிலாளர்கள் தங்கியிருந்த முகாம்கள் சிக்கின. இதில் ஏராளமான வீரர்களும், தொழிலாளர்களும் புதைந்தனர். நேற்றும் 3வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்தது.

ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படை, மணிப்பூர் பிராந்திய வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 18 வீரர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்டோர் காணவில்லை. நவீன கருவிகளை பயன்படுத்தி, இவர்களை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், நேற்றும் 2வது நாளாக நிலச்சரிவு நடந்த இடத்துக்கு சென்று இம்மாநில முதல்வர் பைரன் சிங் பார்வையிட்டார். அப்போது அவர், ‘நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்களாகி விட்டதால், மண்ணில் புதைந்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பது வேதனை அளிக்கிறது. 80க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் அஞ்சுகிறோம்,’ என தெரிவித்தார்.

Related Stories: