×

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, குடிநீர் வழங்கல் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (02.07.2022) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, மூலதன நிதி மற்றும் வெள்ளத் தடுப்பு சிறப்பு நிதி போன்ற பல்வேறு நிதி ஆதாரங்களின் மூலம் ரூ.4,070 கோடி மதிப்பீட்டில் 1,033 கீ.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், வார்டு-157, மணப்பாக்கம் பகுதி மற்றும் திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-68, சிவஇளங்கோ சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப.இன்று (02.07..2022) பார்வையிட்டு ஆய்வு செய்து நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பணி ஆணையில் குறிப்பிட்டுள்ள காலக் கெடுவிற்குள் முடிக்கவும், மேலும் மழைநீர் வடிகால் கட்டமைப்பு வழித்தடத்தில் பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற அறிவுருத்தினார்.

தொடர்ந்து, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வார்டு-157ல் அடையாறு ஆற்றின் நீர் செல்லும் பாதையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடுதல், தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

பின்னர், பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் உட்கட்டமைப்புகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்த CITIIS (City Investments To Innovate, Integrate and Sustain) திட்டத்தின் கீழ் கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-137, நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளியில் ரூ.3.40 கோடி மதிப்பீட்டில்  மேற்கொள்ளப்பட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அண்ணாநகர் மண்டலம், வார்டு - 94வார்டு சென்னை சீர்மிகு நகர திட்ட நிதியின் கீழ் ரூ.45 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வில்லிவாக்கம் ஏரி புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மாதவரம் மண்டலத்தில் திடக்கழிவு மேலாண்மைத் துறையின் மூலம் செயல்படும் உயிரி எரிவாயு நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மணப்பாக்கம், ராமாபுரம் மற்றும் நெசப்பாக்கம் பகுதிகளில் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., , பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் (பொ) எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப.,சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் ராஜ கோபால் சுங்கரா, இ.ஆ.ப.,மத்திய வட்டார துணை ஆணையார் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள், தலைமைப் பொறியாளர்  (பொது) எஸ்.ராஜேந்திரன், தலைமை பொறியாளர் (திடக்கழிவு மேமலாண்மை) என்.மகேசன்,  மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Secretary ,Siv Das Meena ,Chennai Corporation , Chief Secretary Shiv Das Meena inspected the rainwater drainage work being carried out in the areas under the Chennai Municipal Corporation and the drinking water supply works of the Chennai Metropolitan Municipality.
× RELATED தென்மேற்குப் பருவமழை குறித்த பேரிடர்...