இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; அதிரடி சதம் விளாசி அணியை மீட்ட ரிஷப் பன்ட்: சச்சின் உள்ளிட்ட வீரர்கள் பாராட்டு

பர்மிங்காம்: கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்காம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், கில் 17, புஜாரா 13, விஹாரி 20, விராட் கோஹ்லி 20, ஸ்ரேயாஸ் அய்யர் 17 ரன்னில் வெளியேறினர். 98 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில் ரிஷப்பன்ட்-ஜடேஜா சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக ஆடிய ரிஷப் பன்ட் 89 பந்துகளில் சதம் விளாசினார். 111 பந்துகளில் 146 ரன் எடுத்த அவர் ஜோரூட் பந்தில் சிக்சர் அடிக்க முயற்சித்து கேட்ச் ஆனார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன் எடுத்திருந்தது. ஜடேஜா 83, ஷமி ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

இக்கட்டான நேரத்தில் சதம் விளாசி அணியை மீட்ட ரிஷப்பன்ட்டிற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் டுவிட் பதிவில், ரிஷப்பன்ட் அருமையாக ஆடினார்... வெல்டன், ஜடேஜாவின் இன்னிங்சும் முக்கியமானது. பேட்டை நன்றாக சுழற்றி சில அற்புதமான ஷாட்களை ஆடினார் என தெரிவித்துள்ளார். இதேபோல் ஹர்பஜன்சிங், சுரேஷ்ரெய்னா, இர்பான்பதான், வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்டோரும் ரிஷப் பன்ட் இன்னிங்சை பாராட்டி உள்ளனர். பயிற்சியாளரான ராகுல்டிராவிட், பன்ட் சதம் அடித்தபோது இருக்கையில் இருந்து எழுந்து உற்சாகத்துடன் துள்ளிக்குதித்து கைதட்டி மகிழ்ந்தார்.

Related Stories: