வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடந்த தேர் திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

பெரம்பூர்: சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி மூர்த்திங்கர் பகுதியில் சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இரவீஸ்வரர் கோயில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கோயிலில் கடந்த 26ம் தேதி காலை கொடியேற்றத்துடன்  பிரம்மோற்சவ நிகழ்ச்சி துவங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு உற்சவம் நடைபெற்றன. இதில் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா இன்று காலை  10.30 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் இருந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துவந்தனர். அப்போது ஓம் நமச்சிவாய என்று பக்தி கோஷங்கள் முழங்க தேரை இழுத்து சென்றனர். மூர்த்திங்கர் தெரு, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, முத்து முதலி தெரு வழியாக சென்று மீண்டும் மூர்த்திங்கர் தெரு வழியாக கோயிலை வந்தடைந்தது. அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் தேருக்கு ஆரத்தி எடுத்தும் தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.

 

வரும் 5ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும்  பஞ்ச மூர்த்தி உற்சவம் நடைபெற உள்ளது. 7ம் தேதி உற்சவ சாந்தி அபிஷேகம் நடத்தப்பட்டு பிரம்மோற்சவ விழா நிறைவுபெறுகிறது. முன்னதாக தேர்த் திருவிழாவில் வடசென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, கலாநிதி வீராசாமி எம்பி, ஆர்டி சேகர் எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர் கருணாநிதி, பகுதி செயலாளர் தமிழ்வேந்தன், கோயில் நிர்வாகிகள், உபயதாரர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: