தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பியது வால்பாறை மலை பாதையில் வலம் வரும் வரையாடுகள்

*சுற்றுலா பயணிகள் உற்சாகம்; வனத்துறை எச்சரிக்கை

 

வால்பாறை :  தமிழக மாநில விலங்கான வரையாடுகள், பொள்ளாச்சி- வால்பாறை மலை பாதைகளில் கூட்டம், கூட்டமாக மேய்ந்து வருகிறது. இது சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது, உள்ளூர்வாசி, இயற்கை நல ஆர்வலர்கள் கண்டு உற்சாகம் அடைந்துள்ளனர். கோடைகாலத்தில் வறட்சி நிலவியது. இதனால் புல், பூண்டுகள் காய்ந்து, கருகின. உணவு, குடிநீருக்காக வனவிலங்குகள் அவதியடைந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை பொய்யத்தொடங்கியது.

இதனால் வனம், பாறை இடுக்கு மற்றும் சாலைகளில் பசுமை திருப்புள்ளது. புற்கள் வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கிறது.பசுமை நிறைந்த புற்களை மேய வரையாடுகள் கூட்டம் கூட்டமாக படைபெயடு்து வருகிறது.குறிப்பாக வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் வரையாடுகள் கூட்டம் கூட்டமாக நடமாடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் கண்டு ரசித்து உற்சாகம் அடைந்தனர்.

வனத்துறையினர் கூறியதாவது: வரையாடுகள் கடல் மட்டத்திற்கு மேல் 3 ஆயிரம் அடி முதல் 8 ஆயிரம் அடி வரை உயரத்தில் வாழும் தன்மை கொண்டது. ஆடுதானே என்று அருகில் சென்று போட்டோ, செல்பி எடுக்க வேண்டாம். ஊசிபோல் கூர்மையான கொம்புகளால் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

வரையாடுகள் பாறைகளுக்கு இடையே வசிக்கிறது. இதனால் வேட்டை விலங்குகள் இதனை நெருங்குவது கடினம். இவ்வாறு அவர்கள் கூறினர்.தற்போது வால்பாறை பகுதியில் 9-வது கொண்டை ஊசி பகுதி, அட்டகட்டி வரையாட்டுப்பாறை, அக்காமலை, புல்மலை, வரையாட்டு மலை பகுதிகளில் அதிக அளவில் வரையாடுகள் காணப்படுகிறது.

Related Stories: