×

குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழையால் நிரம்பும் அணைகள்

குன்னூர் : குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கோடை காலத்தில் போதிய மழை இல்லாததால் நீர்வீழ்ச்சி, அருவி, நீர் நிலைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. விவசாயிகளும், பொதுமக்களும் மழை பெய்து மீண்டும் நீர் நிலைகள் நிரம்பாதா? என்ன ஏக்கத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் குன்னூர் பகுதியில் மழை பெய்ய ஆரம்பித்தது.

கடந்த சில தினங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்தொடங்கியது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக தற்போது நீர் நிலைகள் நிறைந்து காணப்படுகிறது.
அணைகள் நிரம்பியதால் தண்ணீர் மலைப்பாதைகளில் வழிந்தோடி நீர்வீழ்ச்சிகளாக பயணித்து மேட்டுப்பாளையம் பவானி அணையை அடைகிறது‌.

குன்னூர்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் லாஸ் பால்ஸ் பகுதியில்  தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதேபோன்று காட்டேரி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் அதிகமாக கொட்டுகிறது. இது வன விலங்குகளுக்கான தண்ணீர் தேவை பூர்த்தி செய்து வருகிறது. இதன் காரணமாக வன விலங்குகள் தண்ணீர் தேடி மக்கள் நடமாட்ட பகுதிக்கு வருவது தவிர்க்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.


Tags : Coonoor , Conoor,Heavy Rains,Dams, Water Level increase
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...