முகமது நபிகள் குறித்து நுபுர் சர்மா சர்ச்சை கருத்து; பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும்: ராகுல் காந்தி கருத்து

திருவனந்தபுரம்: முகமது நபி குறித்து சர்ச்சை கருத்தை கூறிய விவகாரத்தில் நூபூர் சர்மா மட்டுமின்றி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ்.க்கும் பொறுப்பு உண்டு என்று ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பி.யுமான ராகுல் காந்தி, கேரளாவுக்கு நேற்று 3 நாள் சுற்றுப் பயணமாக வந்தார். கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து வயநாடு வரை வழிநெடுகிலும் அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், கல்பெட்டாவில் மார்க்சிஸ்ட் மாணவர் அமைப்பினரால் தாக்கப்பட்ட தனது எம்பி அலுவலகத்தை பார்வையிட்டார். பின்னர், அவர் அளித்த பேட்டி வருமாறு: எம்பி அலுவலகம் தாக்கப்பட்டது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம். இது வயநாட்டு மக்களின் அலுவலகம். மாணவர்கள் தான் இதை தாக்கி உள்ளனர். பின் விளைவுகள் குறித்து அவர்கள் யோசித்து இருக்க மாட்டார்கள். எனவே, அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. அவர்களை மன்னிக்கவும் தயாராக இருக்கிறேன். வன்முறையால் எந்த பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது.

முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த சம்பவத்தில், நூபுர் சர்மாவுக்கு மட்டும்தான் பொறுப்பு இருக்கிறது என்று கூறி விட முடியாது. அதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ, ஆர்எஸ்எஸ்.க்கும் பொறுப்பு உண்டு. இந்த விவகாரம் தொடர்பாக இன்று (நேற்று) உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் உண்மையாகும். வெறுப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துக்களை கூறுபவர் மட்டுமின்றி, அவருக்கு துணை இருப்பவர்களும் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

தற்போது நாட்டை ஆள்பவர்கள்தான் மக்களிடையே வெறுப்புணர்வையும், மதவெறியையும் ஏற்படுத்தி பிரிவினையை உண்டாக்குகின்றனர். இது, நமது நாட்டுக்கு மேலும் மேலும் ஆபத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: