காட்பாடி மேம்பாலத்தில் அத்துமீறல்: அதிமுக மாவட்ட செயலாளர் கைது

வேலூர்: காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை அத்துமீறிய புகாரில்  அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்புவை காட்பாடி போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்ேவ மேம்பாலம் சீரமைப்பு பணிகள் ரூ2 கோடி மதிப்பீட்டில் கடந்த ஒரு மாதகாலமாக நடந்து வந்தது. இப்பணிகள் முடிவடைந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மேற்கொண்ட ஆய்வுக்கு பின்னர் நேற்று இருசக்கர வாகன வாகனங்கள் ரயில்வே பாலம் வழியாக அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் காலை 10 மணியளவில் வேலூர் எம்பி கதிர்ஆனந்த் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை பார்வையிட வருவதாக தகவல் வெளியானது. இதனையறிந்த அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தனது ஆதரவாளர்கள் சிலருடன் ரயில்வே மேம்பாலத்துக்கு வந்தார். திடீரென போக்குவரத்தை தடுத்து நிறுத்தியதுடன், மேம்பால சீரமைப்பு பணி சரிவர நடக்கவில்லை என்று கூறிக்கொண்டிருந்தார். மேலும், ரயில்வே மேம்பாலத்தை திறப்பதுபோல் அப்பு ரிப்பன் வெட்டினார்.

இதையறிந்து திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா, 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா மற்றும் திமுக ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் எஸ்.ஆர்.கே.அப்பு மற்றும் அதிமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காட்பாடி போலீசார் அதிமுகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த விவகாரத்தில் தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலர் பவித்ராவின் புகாரின் பேரில் காட்பாடி போலீசார் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு மீது 143, 288, 386, 353, 447 ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த தகவல் வெளியானதும் காட்பாடியில் அதிமுகவினர் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் காட்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: