சென்னை தி.நகரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ15 கோடி சொத்துகள் முடக்கம்: பினாமி தடுப்பு சட்டத்தில் வருமான வரித்துறை நடவடிக்கை

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில், சென்னை தி.நகரில் சசிகலாவுக்கு சொந்தமான ரூ15 கோடி மதிப்புள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் சொத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளனர். ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா மற்றும் அண்ணன் மனைவி இளவரசி, ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமனறத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேல்முறையீடு செய்து தீர்ப்புக்காக காத்திருந்தபோது உடல் நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா உயிரிழந்தார். இதையடுத்து, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அவர் நீக்கப்பட்டார். பின்னர் சிறப்பு நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது அண்ணன் மனைவி இளவரசி, ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ100 கோடி அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

அதைதொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2017ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள் மற்றும் பினாமிகள் பெயரில் வாங்கி குவிக்கப்பட்ட நிலங்கள், நிறுவனங்கள், அச்சகங்களுக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதைதொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு சசிகலாவுக்கு சொந்தமான கொட நாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா உள்ளிட்ட ரூ1600 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கினர். மேலும், கடந்த 2020ம் ஆண்டு போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான வீடு, தாம்பரம், சேலையூர் ஆகிய பகுதிகளில் உள்ள ரூ300 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன. மேலும், கடந்தாண்டு சென்னையை அடுத்த பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான 49 ஏக்கர் நிலம் மற்றும் பங்களா என ரூ100 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டது.

சென்னை தி.நகர் பத்ம நாபா தெருவில் சசிகலாவுக்கு செந்தமான ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற பெயரில் நவீன அச்சகம் உள்ளது. இந்த சொத்து தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. அதில் வருமான வரித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி சசிகலா பினாமி பெயர்களில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனம் இயங்கி வந்தது என உறுதியானது.

அதைதொடர்ந்து வருமான வரித்துறை சசிகலாவுக்கு சொந்தமான தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் ரூ15 கோடி மதிப்புள்ள சொத்துகளை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளது. அதற்கான நோட்டீசும் அந்த நிறுவனத்தின் முன்பு வருமான வரித்துறை ஒட்டியுள்ளது.

Related Stories: