தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் தீவிர ஆலோசனை: அமைச்சர், அதிகாரிகள் பங்கேற்றனர்

சென்னை: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது. கொரோனா உச்சத்தில் இருந்தபோது, கட்டாய முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்துக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைய தொடங்கியதால், கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது.

பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது தமிழகத்திலும் எதிரொலித்தது. தினசரி பாதிப்பு 100க்கும் குறைவாக பல வாரங்கள் நீடித்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என நகர் பகுதிகளில் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்தாலும் கடந்த சில மாதங்களாக உயிரிழப்புகள் இல்லை என்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், இல்லை என்றால் ரூ500 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட திட்டமிட்டுள்ளது.

அதன்படி, நேற்று காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில்குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, “தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தற்போதைய தொற்று பரவல் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

கொரோனா பரவலை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும். பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்களில் காய்ச்சல் பரிசோதனை கட்டாயம் மற்றும் முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்பது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

Related Stories: