×

நாட்டின் இளம் வயது மேயர்!

நன்றி குங்குமம் தோழி

இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன். கடந்த வாரம் கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தின் மாநகர மேயராகப் பொறுப்பேற்று, ஊடகங்களின் பார்வையில் தலைப்புச் செய்தியாகி பரபரப்பைக் கூட்டினார்.

மிகச் சமீபத்தில் கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. மொத்தமுள்ள 100 சீட்டுகளில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி 53 சீட்டுகளைப் பெற்று பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற, பா.ஜ.க 35 சீட்டுகளையும், காங்கிரஸ் 10 சீட்டுகளையும் பிடித்தன.

கேரள உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு இளம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். முதலில் சி.பி.எம் கட்சி, கல்லூரி மாணவிகள் உள்ளிட்டவர்களையும் தேர்தலில் களம் இறக்கியது. அதைத் தொடர்ந்து பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இளம் வேட்பாளர்களை அதிக அளவில் களமிறக்கினர். இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியில், முடவன்முகல் வார்டில் சி.பி.எம். வேட்பாளராக ஆர்யா ராஜேந்திரன் யு.டி.எஃப். வேட்பாளர் கலாவை 2872வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து, மேயரைத் தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இதில் முடவன்முகல் வார்டில் கவுன்சிலராக வெற்றிபெற்ற 21 வயது ஆர்யா ராஜேந்திரனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

100 உறுப்பினர்களை கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஆர்யா ராஜேந்திரனுக்கு ஆதரவாக 54 உறுப்பினர்கள் வாக்களிக்க, அவர் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட கலெக்டர் ஆர்யா ராஜேந்திரனுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.  

ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்துவரும் ஆர்யா சிறுவயது முதலே இடதுசாரி அமைப்பில் களப் பணி ஆற்றியவர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும், சி.பி.எம் கட்சியின் சிறுவர்கள் அமைப்பான பாலசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இருந்து வருகிறார். கூடவே சி.பி.எம். மாணவர்கள் அமைப்பான எஸ்.எஃப்.ஐ மாநில அலுவலக பொறுப்பாளராகவும், சி.பி.எம். கிளைக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

இந்தியாவின் முதல் இளம் மேயர் என்ற பெருமையுடன் மதிப்புமிக்க மேயர் இருக்கையில் அமர்ந்திருப்பது குறித்து ஆர்யா பேசுகையில், ‘கட்சி எனக்கு ஒப்படைத்த பணியை மகிழ்ச்சியோடு ஏற்று இருக்கிறேன். எனது படிப்புடன் கவுன்சிலர் பணியையும் சிறப்பாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.

முக்கியமாக பெண்களின் பிரச்னைகள் மற்றும் பிற வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துவேன். திருவனந்தபுரம் மாநகராட்சியில் குப்பைகளைக் கையாளுவது, ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டுவருவது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்’ என்கிறார் இந்த இளம் மேயர் புன்னகையோடு.

கேரளாவின் இடதுசாரி முதல்வரான தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்  மனைவி ஆர்யா மீதுள்ள அன்பில், தனக்கு அவர் பெயரையே தனது பெற்றோர் சூட்டியதாகத் தெரிவிக்கிறார் ஆர்யா ராஜேந்திரன்.நடிகர் மோகன்லால் வீடு இருக்கும் இடமான முடவன்முகல் பகுதி மோகன்லாலின் பெயராலேயே அறியப்பட்டது. இனி, ‘இந்தியாவின் இளம் வயது மேயரின் ஊர்’ எனவும் அறியப்படும்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Tags : mayor ,country ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!