சுதந்திர தினம், குடியரசு தினத்தை விட ஜிஎஸ்டி தினத்தை முக்கிய நாளாக பார்க்கிறேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: சுதந்திர தினம், குடியரசு தினத்தை விட ஜிஎஸ்டி தினத்தை முக்கிய நாளாக பார்க்கிறேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது. அதை இன்று நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை கலைவாணர் அரங்கில் 5வது தேசிய ஜிஎஸ்டி நாள், ஜிஎஸ்டி கவுன்சில் சார்பில் நேற்று  நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜிஎஸ்டி ஆணையர் எம்விஎஸ் சவுத்ரி மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

வருவாய் மற்றும் சுங்கத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை ஆளுநர் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: நம்முடைய சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவற்றைவிட இந்த நாள் மிக்க முக்கியமான நாளாக பார்க்கிறேன். ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்ததற்கு பிறகு இந்த ஜிஎஸ்டி நாள் முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது.  சர்தார் படேல் இந்த நாட்டை எப்படி ஒன்று சேர்க்க நினைத்தாரோ, அதேபோல, தான் ஜிஎஸ்டி மூலம் ஒரே நாடு, ஒரே வரி் என்று இந்த நாடு ஒன்றிணைகிறது.

 ஜிஎஸ்டி வரி  மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் எளிமையாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டில் ஜிஎஸ்டி வரி மூலம் ரூ35 கோடி முதல் ரூ1500 கோடி வரை லாபம் உயர்ந்துள்ளது.  அடுத்த 25 ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியா பலமான நாடாக இருக்கும். ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் இந்திய நாட்டுக்கு முக்கிய பங்காற்றி வருகின்றனர். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

Related Stories: