முர்மு இன்று சென்னை வருகை; இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் இணைந்து வரவேற்பார்களா? நுங்கம்பாக்கம் ஓட்டலில் வாக்குகேட்கிறார்

சென்னை: பாஜ சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சென்னை வருகிறார். அப்போது, அதிமுக சார்பில் இபிஎஸ் - ஓபிஎஸ் இணைந்து அவரை வரவேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று மாலை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கூட்டணி கட்சியினரை சந்தித்து வாக்கு கேட்கிறார். பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆதரவு கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

அதன்படி, யஷ்வந்த் சின்கா நேற்று முன்தினம் சென்னை வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு கேட்டார். இந்நிலையில் பாஜ சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு இன்று (2ம் தேதி) சென்னை வருகிறார். அவர் இன்று மாலை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பி, எம்எல்ஏக்களை சந்திக்கிறார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சிகளான பாமக தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்து வாக்கு கேட்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜ கட்சியினர் செய்து வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில், அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் எதிரும் புதிருமாக செயல்பட்டு வருகிறார்கள்.

கட்சியை கைப்பற்றுவதில் இருவரும் நீதிமன்றம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தை நாடி உள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், ஜனாதிபதி வேட்பாளர் முர்மு இன்று சென்னை வருகிறார். அப்போது அவரை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் ஒரே நேரத்தில் வரவேற்று, தங்கள் ஆதரவை தெரிவிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் தற்போது ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகிய 3 எம்எல்ஏக்களும், ரவீந்திரநாத், தர்மர் ஆகிய 2 எம்பிக்கள் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். மற்ற அனைத்து எம்பி, எம்எல்ஏக்களும் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளனர்.

இதுகுறித்து, அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ``அதிமுகவில் ஓபிஎஸ் அனைவருடனும் இணைந்து செயல்படவே விரும்புகிறார். ஆனால், எடப்பாடி தரப்பினர் ஓபிஎஸ் அணியை கட்சியில் இருந்தே கழட்டிவிட முயற்சி செய்து வருகிறார்கள். அதனால் இன்றைக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் இணைந்து ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை வரவேற்பார்களா என்பது கேள்விக்குறிதான். ஆனாலும் தனித்தனியே சந்தித்து தங்கள் ஆதரவை நிச்சயம் தெரிவிப்பார்கள்” என்று கூறினார்.

Related Stories: