திருவள்ளூர் நகர மன்ற கூட்டம்; பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் பா.உதயமலர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் வி.வசந்தி வேலாயுதம், வி.சுமித்ரா வெங்கடேசன், ப.நீலாவதி பன்னீர்செல்வம், அம்பிகா ராஜசேகர், கு.பிரபாகரன், ஆர்.பிரபு, ஜி.சாந்தி கோபி, அயூப் அலி, டி.கே.பாபு, வி.இ.ஜான், ஜி.ஆர்.ராஜ்குமார் (எ) தாமஸ், எஸ்.பத்மாவதி ஸ்ரீதர், ஜெ.அருணா ஜெய்கிருஷ்ணா, டி.செல்வகுமார், இந்திரா பரசுராமன், வி.சீனிவாசன், எஸ்.ஹேமலதா, ஜி.கந்தசாமி, ஆர்.விஜயகுமார், எம்.கமலி, வி.சித்ரா, ஏ.ஆனந்தி சந்திரசேகர், எல்.செந்தில்குமார், கே.விஜயலட்சுமி கண்ணன், எஸ்.தனலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின் கம்பங்கள் மற்றும் நெடுஞ்சாலையில் உள்ள தூண்களில் கட்டப்பட்டுள்ள தனியார் கேபிள் டிவி வயர்கள் தொங்குவதால் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்பது. கம்பங்கள் சேதமடைவதை தவிர்க்கவும் கேபிள் வயர்களை அகற்ற நடவடிக்கை எடுப்பது. நகராட்சியில் உள்ள நவீன எரிவாயு தகன மேடை பழுதடைந்துள்ளதால் அதனை சீரமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 11வது வார்டு கவுன்சிலர் வழக்கறிஞர் வி.இ.ஜான் பேசும்போது, `திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் அமாவாசை தினத்தன்று நகராட்சி சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நகர மக்கள் பள்ளிகளுக்கு குழந்தைகளை கொண்டு சென்று விட முடியாமலும், வேலைக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமலும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே இதைனை தடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். பின்னர் 9வது வார்டு கவுன்சிலர் அயூப் அலி பேசும்போது, `அதிக பரப்பளவை கொண்டுள்ள 9வது வார்டில் தூய்மை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறையால் ஆங்காங்கே குப்பைகளும் கழிவுநீரும் தேங்கியுள்ளது. எனவே கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டும்’ என்றார். மேலும் 6வது வார்டு உறுப்பினர் கு.பிரபாகரன் பேசும்போது, `பட்டரைப் பெரும்புதூரிலிருந்து வீரராகவர் கோயிலுக்கு பைப் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதற்காக வீரராகவர் கோயில் பின்புறம் சாலையை தோண்டி பைப் அமைக்கப்பட்டது. ஆனால் தோண்டிய சாலையை சீரமைக்காமல் இருப்பதால் பஜார் வீதிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்’ என்றார்.

தொடர்ந்து 12வது வார்டு கவுன்சிலர் தாமஸ் (எ) ராஜ்குமார் பேசும்போது, `12வது வார்டு பகுதியில் சாலைகளை மேம்படுத்தி தர வேண்டும். பல தெருக்களில் தெருவிளக்கு இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளதால் குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. ஆகையால் அந்த குற்ற சம்பவங்களை தடுக்க தெரு விளக்குகளை சீராக அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். 8 மாதத்திற்கு முன்பே தெரு விளக்கு சம்மந்தமாக டெண்டர் விடப்பட்ட நிலையில், இது வரை செயல்பாட்டிற்கு வரவில்லை என தெரிகிறது. எனவே தெரு விளக்குகளை உடனடியாக அமைத்து தர வேண்டும்’ என்றார். இதனைத்தொடர்ந்து நகர்மன்றத் தலைவர் பா.உதயமலர் பாண்டியன் பேசும்போது, `நகராட்சி கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என உறுதியளித்தார்.

Related Stories: