திருவேற்காடு நகராட்சி சார்பில் பாடல் மற்றும் சுவர் ஓவியப்போட்டி; முதல் பரிசு ரூ.20 ஆயிரம்

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சி சார்பில் பாடல் மற்றும் சுவர் ஓவியப்போட்டி நடக்கிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செங்கல்பட்டு மண்டலம் சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் பங்களிப்போடு நகரை தூய்மையாக வைத்துக்கொள்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் நகர்ப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவேற்காடு நகராட்சி சார்பில் மாபெரும் பாட்டு மற்றும் சுவர் ஓவியப்போட்டி நடத்தப்பட உள்ளது.

இதேபோல் செங்கல்பட்டு மண்டலத்துக்கு உட்பட்ட நகராட்சிகளின் சார்பில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. ‘என் குப்பை எனது பொறுப்பு’ - (கழிவுகளை பிரித்தல்), நகரங்களின் தூய்மைக்கு மக்களின் பங்களிப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்களின் பங்காக மரம் வளர்ப்பதன் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழியினை தவிர்ப்பதன் அவசியம், நீர்நிலைகளை பாதுகாப்போம் ஆகிய தலைப்புகளில் பாடல்கள் இருக்க வேண்டும். செங்கல்பட்டு மண்டலத்துக்குட்பட்ட  நகராட்சியைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் இதில் கலந்துகொள்ளலாம். சர்ச்சைக்குரிய கருத்துப்பதிவுகள் தவிர்க்க வேண்டும். பாடல்கள் இசையுடன் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும். பாடலை வருகிற ஜூலை 6ம் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்க்கண்ட வலைத்தள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதேபோல் சுவர் ஓவியப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது நகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டு ஓவியம் வரைவதற்கான இடம் மற்றும் முன் அனுமதி பெறவேண்டும். மேலும், சுவர் ஓவியம் வரைவதற்கு முன்பும் பின்பும் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செயய்யவேண்டும். அதன் ஒரு நகலினை நகராட்சி ஆணையருக்கு ஜூலை 6ம் தேதிக்குள் நேரடியாக ஒப்படைக்க வேண்டும். நடுவர்களின் இறுதி திர்ப்பே முடிவானது. பாடல் மற்றும் சுவர் ஓவியம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரம், 2ம் பரிசு ரூ.10 ஆயிரம், 3ம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசாக 5 பேருக்கு ரூ.1000 வழங்கப்படும். வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 9ம் தேதி பரிசு வழங்கப்படும் என்று திருவேற்காடு நகராட்சி நிர்வாக மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: