×

டோனியை போல் எனது வேலையில் மட்டும் முழு கவனம் செலுத்துவேன்; புதிய கேப்டன் பும்ரா பேட்டி

பர்மிங்காம்: இங்கிலாந்து-இந்தியா இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்காAமில் இன்று தொடங்கியது. இதில் இந்திய அணியின் கேப்டனாக முதன்முறையாக பொறுப்பேற்ற பும்ரா அணியை வழிநடத்தினார். கபில்தேவிற்கு பிறகு 35 ஆண்டுகளில் இந்திய அணியை வழிநடத்தும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை அவர் பெற்றார். இந்திய அணியின் 36வது டெஸ்ட் கேப்டனான அவர் அளித்த பேட்டி : “இந்திய அணியை வழிநடத்த எனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை மிகப்பெரும் கவுரமாக நான் பார்க்கிறேன்.

இந்திய டெஸ்ட் அணியில் எப்படியாவது இடம்பிடித்துவிட வேண்டும் என்பதே எனது பெரிய கனவாக இருந்தது, ஆனால் தற்போது அணியையே வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளதை எனது வாழ்நாளின் மிகப்பெரும் சாதனையாக கருதுகிறேன். இந்திய அணியில் அனுபவமிக்க பல வீரர்கள் உள்ளனர், அனைவரிடம் இருந்தும் நான் ஆலோசனைகள் கேட்பேன், அவர்களிடம் இருந்து நிறைய கற்று கொள்ள விரும்புகிறேன். ஆனால் இறுதி முடிவை எந்த தலையீடும் இல்லாமல் நான் மட்டுமே எடுப்பேன்.

டோனி பல வருடங்களுக்கு முன்பு என்னிடம் கூறிய சில வார்த்தைகள் இப்போது என் நினைவுக்கு வருகிறது. இந்திய அணிக்கு கேப்டனாவதற்கு முன் டோனி எந்த ஒரு அணியின் கேப்டனாகவும் செயல்பட்டது இல்லை என என்னிடம் கூறியிருந்தார். என்னை பொறுத்தவரையில் டோனி கிரிக்கெட்டிற்கு கிடைத்த மிக சிறந்த கேப்டன். அவரை போலவே எனது வேலையில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த உள்ளேன்” என தெரிவித்தார்.

Tags : Tony ,Bumrah , Like Tony, I will concentrate only on my work; Interview with new captain Bumrah
× RELATED பந்துவீச்சு பற்றி பும்ராவிடம்...