முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கு பதிவு செய்யக்கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதன் அடிப்படையில் லஞ்சஒழிப்புதுறை போலீசார் எஸ்.பி வேலுமணி எதிராக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த அதிமுக ஆட்சில் தரப்பட்ட விசாரணை அறிக்கையை தரவேண்டும் என எஸ்.பி வேலுமணி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் விசாரணை அறிக்கையை வழங்க உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கு விசரணைக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.

இந்நிலையில், மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும், இரண்டு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என எஸ்.பி வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசரணைக்கு உகந்ததா என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜராகி வாதிட்டார். அவர் கூறுகையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு விசரணைக்கு உகந்ததா என முடிவு செய்வதற்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் வழக்கு விசரணைக்கு உகந்ததா என்பது குறித்து லஞ்சஒழிப்புத்துறை, அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பதிலளிக்க வேண்டும். அதற்கு காலஅவகாசம் அளிக்க வேண்டும். அந்த கால அவகாசம் முடிவடைந்த பின்னரே இதுகுறித்து முடிவு செய்யப்படவேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர். ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கும் இதோடு சேர்த்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: