×

மகாராஷ்டிராவில் ஆட்ேடா டிரைவராக வாழ்க்கையை தொடங்கி முதல்வரான ஷிண்டேவின்; அரசியல் வாழ்க்கை ஒரு பார்வை!

மும்பை: பொதுவாக அரசியல் களம் சூடானது. எந்த நேரத்தில் எதுவானாலும் நடக்கலாம். அதற்கு பல உதாரணங்களை நமது நாடு கண்டுள்ளது. அந்த வகையில்தான் யாருமே எதிர்பாராத வகையில், சிவசேனா அதிருப்தி அணி தலைவரான 58 வயது ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அதிலும் ஆட்டோ டிரைவராக வாழ்க்கையை தொடங்கிய அவர், இன்று அரசியல் சாசனத்தின் உயரிய பதவிகளில் ஒன்றான முதல்வர் பதவியை எட்டி பிடித்துள்ளார். இவர் மகாராஷ்டிரா சத்தாரா மாவட்டத்தில் உள்ள ஜவாலி தாலுகாவை சேர்ந்தவர். இவரது குடும்பம் வாழ்வாதாரத்திற்காக மாநில தலைநகர் மும்பை நோக்கி 1970-களில் இடம்பெயர்ந்தது. மும்பையை அடுத்த தானே நகரில் குடிபுகுந்தனர். ஏக்நாத் ஷிண்டே 11-ம் வகுப்பு வரை தானேயில் உள்ள பள்ளியில் படித்தார்.

பின்னர் படிப்பை நிறுத்திய அவர், சிறிது காலம் ஆட்டோ டிரைவராக இருந்தார். அந்த நேரத்தில் பால் தாக்கரேவால் ஈர்க்கப்பட்டு சிவசேனாவில் இணைந்தார். மண்ணின் மைந்தர் உரிமைக்காக சிவசேனா நடத்திய போராட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு வந்தார். அந்த நேரத்தில் தானேயில் பலம்வாய்ந்த சிவசேனா தலைவராக இருந்த ஆனந்த் திகேவுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 1997ம் ஆண்டு ஆனந்த் திகே மூலமாக தானே மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு ஏக்நாத் ஷிண்டேவுக்கு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி கொண்டு தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏக்நாத் ஷிண்டேயின் மனைவி லதா. இந்த தம்பதிக்கு 3 மகன்கள். மூத்த மகன் காந்த் ஷிண்டே, தற்போது கல்யாண் நாடாளுமன்ற தொகுதி சிவசேனா எம்பி.யாக உள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி அணியை உருவாக்கிய நிலையில், தந்தையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே 2000ம் ஆண்டு ஜூன் மாதம் சொந்த ஊரில் நடந்த படகு விபத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் இளைய மகன்கள் திபேஷ் (11), சுபந்தா (7) ஆகியோர் உயிரிழந்தனர். இது ஏக்நாத் ஷிண்டேவின் வாழ்க்கையில் பேரிடியாக அமைந்தது. அப்போது, அவர் அரசியலில் இருந்து விலகி செல்ல இருந்தார். அந்த நேரத்தில் ஆனந்த் திகே, ஏக்நாத் ஷிண்டேவுக்கு உறுதுணையாக இருந்து அவரை மீண்டும் அரசியல் பாதையில் பயணிக்க செய்தார். இதற்கிடையே 2004ம் ஆண்டு முதல் முறையாக எம்எல்ஏவாக ஏக்நாத் ஷிண்டே தேர்வானார். அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பால் தாக்கரே கொடுத்திருந்தார். அதன்பிறகு ஏக்நாத் ஷிண்டே, தானே மாவட்டத்தில் சிவசேனாவின் பலம் வாய்ந்த தலைவராக உருவெடுத்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு மீண்டும் எம்எல்ஏவாக தேர்வானார். அப்போது அமைந்த பாஜ- கூட்டணி ஆட்சியில் ஏக்நாத் ஷிண்டே அமைச்சரானார். பொதுப்பணித்துறை, சுகாதாரம் ஆகிய முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. 2019ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு, 3வது முறையாக எம்எல்ஏவாக தேர்வானார். உத்தவ் தாக்கரேயின் வலதுகரம் ஏக்நாத் ஷிண்டே பால்தாக்கரே குடும்பத்தின் தீவிர விசுவாசி. கட்சி பணிக்கு உத்தவ் தாக்கரேக்கு வலதுகரமாக இருந்தார். இதனால் உத்தவ் தாக்கரே ஆட்சியில் முக்கிய இலாகாவான நகர்புற மேம்பாட்டு துறை ஏக்நாத் ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் கட்சியிலும், ஆட்சியிலும் தான் ஓரங்கட்டப்படுவதாக ஷிண்டே உணர்ந்தார்.

உத்தவ் தாக்கரே அவரது மகன் ஆதித்ய தாக்கரேயை கட்சியிலும், ஆட்சியிலும் வளர்த்து விட்டதும், அவர்கள் இருவரும் தனது இலாகாக்களில் தலையிட்டு வந்ததும் ஏக்நாத் ஷிண்டேக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. உத்தவ் தாக்கரே மீது மனகசப்புகள் ஏற்பட்டது. மேலும் உத்தவ் தாக்கரே தனது சொந்த கட்சி எம்எல்ஏக்களை பல்வேறு காரணங்களால் நேரில் சந்திப்பதை தவிர்த்து வந்த நிலையில், உத்தவ் தாக்கரேயின் விசுவாசியாக கருதப்பட்ட ஏக்நாத் ஷிண்டேவிடம் அவர்கள் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் அவர் பாஜ.வுடன் இணைந்து மகாராஷ்டிரா ஆட்சி கனியை தனது வசமாக்கி உள்ளார். 2019-ம் ஆண்டு தேர்தலில் சிவசேனாவின் சட்டமன்ற குழு தலைவராக ஏக்நாத் ஷிண்டே தான் தேர்வு செய்யப்பட்டார்.

 சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தபோது ஏக்நாத் ஷிண்டே தான் முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கூட்டணி ஆட்சியை திறம்பட நடத்தி செல்ல உத்தவ் தாக்கரே தான் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேட்டு கொண்டார். எனவே அப்போது ஏக்நாத் ஷிண்டே ஏமாற்றமடைந்தார். தற்போது பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக ஏக்நாத் ஷிண்டேக்கு அந்த பதவி கிடைத்திருக்கிறது

Tags : Shinde ,Ateda ,Maharashtra , Shinde, the first to start his career as an Ateda driver in Maharashtra; A view of political life!
× RELATED ஏக்நாத் தலைமையில் செயல்படுவது...