மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றாலம் ஐந்தருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளபெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் திடீரென வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் மழை இல்லாததால் அருவிகளில் தண்ணீர் குறைவாக இருந்தது. இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி  மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக மாலையில் ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொள்ளாட்சி அருகே ஆழியார் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கவி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கவி அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவி கொரோனா மற்றும் வறட்சி காரணமாக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டு இதுவரை திறக்காமல் உள்ளது. வெள்ளம் குறைந்த உடன் ஆழியார் அருவி மீண்டும் திறக்கப்படும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.     

Related Stories: