×

ஒருபக்கம் போராட்டம்.. மறுபக்கம் குவியும் விண்ணப்பம்! .. அக்னிபாதை விமானப்படையில் சேர ஒரே வாரத்தில் 2.72 லட்சம் பேர் விருப்பம்!!

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தின்கீழ் விமான படையில் சேர 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அக்னிபாதை என்ற ராணுவ ஆட்சேர்ப்புத் திட்டத்தை  கடந்த 14ம் தேதி ஒன்றிய அரசு அறிவித்தது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ராணுவ வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களை சேர்க்க கடும் எதிர்ப்பு கிளம்பி இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமான படையில் சேருவதற்கு விண்ணப்பங்கள் கடந்த 24ம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. விமான படையில் சேருவதற்கு முதல் நாளில் 3 ஆயிரத்து 800 பேர் விண்ணப்பித்ததாக விமான படை தெரிவித்தது.

இந்நிலையில், நேற்று வரை அதாவது 7 நாட்களில் 2.72 லட்சம் பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அடுத்த மாதம் 5ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த மாதம் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அக்னிபாதை திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி  நாடு முழுவதும் பல்வேறு கட்சியின் சார்பில் போராட்டங்கள் வெடித்துள்ளன. சட்டீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், பீகார், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.


Tags : Agnipad Air Force , Struggle, Application, Fire Path, Air Force
× RELATED புயல், வெள்ள நிவாரணத்துக்கு கேட்டதோ...