மாமண்டூர் கிராமத்தில் தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி மாணவர்கள், பெற்றோர் போராட்டம்

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே மாமண்டூர் கிராமத்தில்   ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால், ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க கோரியும் தலைமை ஆசிரியர் மாற்ற வேண்டுமென, அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ,பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மாமண்டூர்  ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ,  சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களிலிருந்து  62 மாணவ, மாணவிகள் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், முறையாக 7 ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் இப்பள்ளியில் ஆங்கிலம். அறிவியல் .உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை மாணவர்கள் மற்றும்  பெற்றோர்கள், பொதுமக்கள் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேற்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள்  பள்ளியின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இப்பள்ளியில் மாணவர்களுக்கு அடிப்படை வசதியான கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லை என்றும் கழிப்பறை பயன்படுத்த முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும்  இது குறித்து பலமுறை மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது அதற்கு சரியான பதில் கூறுவதில்லை என்றும் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் மாணவர்  குற்றம் சாட்டி வருகின்றனர் . எனவே தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்த தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் கூறுகையில், வெகு விரைவில் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை  நிரப்புவதாகவும் அடிப்படை வசதிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தார். அதன்பேரில் மாணவர்கள் வகுப்பறைகளுக்கு சென்றனர். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை போராட்டம் நீடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை  நிறுப்பவில்லை என்றால் மீண்டும் போராட்டம் பெரிய அளவில் செய்வோம் என எச்சரித்தனர்.

Related Stories: