×

தனுஷ்கோடிக்கு மேலும் 4 இலங்கை தமிழர் வருகை; மணல் திட்டில் தவித்தவர்கள் மீட்பு

ராமேஸ்வரம்:  இலங்கையில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் கடல் வழியாக தமிழகத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். இவர்கள் மணடபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடல் பகுதி நான்காம் மணல் திட்டில் இறக்கி விடப்பட்ட இலங்கை தமிழர்கள் 4 பேர் நேற்று காலை வரை தவித்து வந்தனர்.

நேற்று அதிகாலை மீன் பிடித்து திரும்பிய தனுஷ்கோடி மீனவர்கள், இதுகுறித்து மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து இந்திய கடலோர காவல் படையின் ஹோவர்கிராப்ட் கப்பல் அப்பகுதிக்கு வருவதற்கு தாமதமாகியதை தொடர்ந்து, தனுஷ்கோடி மீனவர்களிடம் அவர்களை படகில் ஏற்றி வருமாறு போலீசார் கேட்டனர்.

உடனடியாக மணல் திட்டுப்பகுதிக்கு நாட்டுப்படகில் சென்ற மீனவர்கள் ஒரு சிறுவன், ஒரு பெண் உள்பட 4 பேரையும் படகில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் அவர்கள் இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த மகேந்திரன் (50), வவுனியாவை சேர்ந்த பிரான்சிஸ் டொமினிக் (42), சுதர்ஷினி (23), 6 வயது சிறுவன் என்பதும், தலைமன்னாரில் இருந்து படகில் தனுஷ்கோடிக்கு வந்த நிலையில் படகோட்டிகள் நள்ளிரவில் மணல் திட்டில் இறக்கி விட்டு சென்றதும் தெரிந்தது. விசாரணைக்கு பின் அவர்களை மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Dhanushkodi , 4 more Sri Lankan Tamils visit Dhanushkodi; Rescue of victims in sand dunes
× RELATED தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு...