சட்டப்பேரவையில் பினராய் கூறிய அனைத்தும் பொய் முதல்வர் வீட்டுக்கு ரகசியமாக பலமுறை தனியாக சென்றேன்: தைரியம் இருந்தால் சிசிடிவி காட்சிகளை வெளியிடுங்கள்; சொப்னா சவால்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயனின் வீட்டுக்கு ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நான் பலமுறை  தனியாக சென்றுள்ளேன் என்று சொப்னா கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் சொப்னா ரகசிய வாக்குமூலம் அளித்தார். இந்த விவகாரம் சட்டப்பேரவையில் எதிரொலித்தது. அப்போது விளக்கமளித்த முதல்வர் பினராய் விஜயன், ‘தங்கக் கடத்தல் விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை. சூட்கேசில் நான் பணத்தை கடத்தவில்லை. சொப்னா பின்னணியில் சங் பரிவார் உள்ளது’ என்று கூறினார்.

இந்நிலையில் கொச்சியில் சொப்னா நிருபர்களிடம் கூறுகையில், ‘சட்டசபையில் முதல்வர் பினராய் விஜயன் தங்கக் கடத்தல், பணம் கடத்தல், அமீரக துணைத் தூதருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவை குறித்து கூறிய அனைத்தும் பொய்யாகும். திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் பினராய் விஜயனின் அரசு இல்லத்திற்கு  அமீரக துணைத் தூதருடனும், நான் தனியாகவும் பலமுறை சென்றுள்ளேன். இதற்கு ஒன்றிய வெளியுறவுத்துறையின் அனுமதி கிடையாது. அவை அனைத்தும் ரகசிய  பேச்சுவார்த்தை என்பதால் இதுதொடர்பாக வெளியுறவுத் துறைக்கு எந்த தகவலும்  தெரிவிக்கப்படவில்லை.

மேலும் தலைமைச் செயலகத்திற்கும் சென்று நான் பலமுறை பினராய் விஜயனை சந்தித்து பேசி உள்ளேன். இதுதொடர்பான வீடியோக்கள் என்னிடம் உள்ளன. தைரியம் இருந்தால் 2016 முதல் 2020ம் ஆண்டு வரை தலைமைச் செயலகம்,  பினராய் விஜயனின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வெளியே விட வேண்டும். இதே போல சார்ஜா மன்னர் திருவனந்தபுரம் வந்தபோதும் ஒன்றிய வெளியுறவுத் துறைக்கு தெரியாமல் நான்தான் பினராய்  விஜயனின் வீட்டுக்கு அழைத்து சென்றேன். இது தொடர்பான வீடியோவும் என்னிடம்  உள்ளது. இந்த விவரங்களை நான் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் தெரிவித்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: