உதய்பூரில் தலை துண்டிப்பு டெய்லர் படுகொலை வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும்: என்ஐஏ.க்கு முதல்வர் கெலாட் வலியுறுத்தல்

உதய்பூர்: நுபுர் சர்மாவை ஆதரித்ததால் ராஜஸ்தானில் தலை துண்டித்து கொல்லப்பட்ட டெய்லர் கன்னையா லால் வீட்டிற்கு முதல்வர் அசோக் கெலாட் சென்று ஆறுதல் கூறினார். மேலும், இந்த வழக்கை என்ஐஏ விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மால்டாஸ் பகுதியை சேர்ந்த கன்னையா லால் என்ற டெய்லர், நுபுர் சர்மாவின் சர்ச்சை கருத்துக்கு ஆதரவு தெரிவித்து சமூகவலைதளங்களில் பதிவு போட்டதால், கடந்த 28ம் தேதி அவரை 2 பேர் தலை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்தனர்.

 இது தொடர்பாக பாகிஸ்தனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தாவ்த்-இ-இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ரியாஸ் அக்தாரி, கோஸ் முகமது ஆகியோரை கைது செய்தனர். இருவரின் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து என்ஐஏ விசாரித்து வருகிறது. உதய்பூரில் பதற்றத்தை தணிக்க, 7 காவல் மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 2 ஏடிஜிபிக்கள் தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று இந்து அமைப்புகள் சார்பில் ‘சர்வ் ஹிந்து சமாஜ்’ பேரணி, கலெக்டர் அனுமதியுடன் டவுன்ஹால் முதல் ஆட்சியர் அலுவலகம் வரை அமைதியாக நடைபெற்றது. இந்நிலையில் கன்னையா லால் வீட்டிற்கு நேற்று முதல்வர் அசோக் கெலாட் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில், ‘தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) உதய்பூர் கொலை வழக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரிக்க வேண்டும். விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும். விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால், தண்டனை விரைவில் வழங்க வழிவகுக்கும்’ என்றார்.

Related Stories: