சிறு தொழில்முனைவோரை ஊக்குவிக்க கொள்கை மாற்றம்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக கொள்கையில் தேவையான மாற்றம் செய்வதற்கு அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி விக்யான் பவனில் நடந்த உத்யமி பாரத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் செயல்திறனை உயர்த்துதல் மற்றும் விரைவுபடுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் தயாரிப்புக்கள் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் ஏற்றுமதியாளர்கள் திறன் மேம்பாட்டு திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் புதிய அம்சங்களும் தொடங்கி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது; சிறு தொழில் முனைவோர் அரசுக்கு பொருட்களை வழங்குவதற்கு ஏதுவாக ஜிஈஎம் போர்ட்டலில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆத்மநிர்பார் பாரத் அபியான் எனப்படும் சுயசார்பு இந்தியா இயக்கத்துக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் இன்றியமையாதது. கடந்த 8 ஆண்டுகளில் சுயசார்பு இந்தியாவை வடிவமைப்பதில் மகத்தான பங்காற்றப்பட்டு உள்ளது.  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை வலிமைப்படுத்துவதற்காக கடந்த 8 ஆண்டுகளில் 650 சதவீதத்துக்கும் அதிகமாக பட்ஜெட்டை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது.

இந்த துறையின் சிறப்பான திறனை கருத்தில் கொண்டே அரசு முடிவுகளை எடுத்து கொள்கைகளை உருவாக்குகிறது. எந்த துறையாக இருந்தாலும், வளர்ச்சியடைவும், விரிவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அரசு எப்போதும் ஆதரவு அளிப்பது மட்டுமின்றி கொள்கைகளில் தேவையான மாற்றங்களை செய்யவும்  தயாராக இருக்கின்றது. முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 36 கோடி வங்கி கடன்களில் 70 சதவீத கடன்கள் பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

* கிராமங்களில் அதிகவேக இணையசேவை

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கட்டப்பட்டுள்ள போஷ்  ஸ்மார்ட் வளாகத்தை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திறந்து வைத்தார். அதில் பேசிய அவர், ‘இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இருக்கின்றது. நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப உலகிலும் மிகப்பெரிய வாய்ப்புக்கள் உள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணையசேவை வழங்குவதற்காக அரசு பணியாற்றி வருகின்றது,’ என தெரிவித்தார்.

Related Stories: