தமிழகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடியில் LKG,UKG வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரக்கூடிய 2,381 அங்கண் வாடி மையங்களிலும் LKG, UKG மாணவர் சேர்க்கையை தொடங்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் LKG, UKG வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் தற்ப்போது அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான நடைமுறைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவந்தது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 5 லட்ச்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அதிலும் குறிப்பாக 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் மட்டும் 2.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப்பள்ளியின் மேல் நம்பிக்கை வைத்து சேர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனை கையாளக்கூடிய வகையில்  LKG, UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  LKG, UKG மாணவர் சேர்க்கையை ஒன்றிய நகராட்சி மற்றும் அரசு தொடக்க, நடுநிலை பள்ளி வளாகத்தில் இயங்கி வரக்கூடிய அங்கன்வாடி மையங்களில் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2,381 அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே தலைமை ஆசிரியர்களால் இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இந்த மாணவர் சேர்க்கையை தொடங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை LKG வகுப்பிலும், 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை UKG வகுப்பிலும் சேர்த்திட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

3வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் அங்குள்ள ஊழியர்களை கொண்டு பராமரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகளை இருக்கும் பட்சத்தில் அதில் இந்த LKG, UKG வகுப்புகளை நடத்தலாம் என்றும், கூடுதல் வகுப்பறைக்கு தேவைப்படும் பட்சத்தில் அதனை அரசுக்கு பரிந்துரைகளாக வழங்கும் பட்சத்தில், போதுமான நிதி வழங்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மாணவர் சேர்க்கையை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி மையங்களின் கண்காணிப்பாளர், ஊழியர்கள் முன்னின்று இந்த மாணவர் சேர்க்கையை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அரசு பள்ளிகளில் நம்பிக்கையுடன் சேரும் இந்த நேரத்தில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக இந்த மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: