உதய்பூரில் டெய்லர் படுகொலை கைதான 2 பேர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கர அமைப்புடன் தொடர்புடையவர்கள், ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள்; போலீசார் திடுக் தகவல்

புதுடெல்லி: உதய்பூர் டெய்லர் படுகொலையில் கைதான 2 பேர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கர அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் எனவும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். முகமது நபிகள் குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பாஜ தகவல் தொடர்பாளராக இருந்த  நுபுர் சர்மா கூறியதற்கு உலகளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இருப்பினும், அவரை ஆதரித்து சமூக வலைதளங்களில் சிலர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதேபோல், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மால்டாஸ் பகுதியை சேர்ந்த டெய்லர் கன்னையா லால் என்பவர், நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளத்தில் சில தினங்களுக்கு முன் பதிவு வெளியிட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் இவருடைய கடைக்கு பைக்கில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவன், செல்போனில் படம் பிடிக்க, மற்றொருவன் கடைக்குள் சென்று துணி தைக்க அளவு எடுக்கும்படி லாலிடம் கூறினான். உடனே அவரும் அளவு எடுக்க தொடங்கியபோது, அந்த வாலிபன் திடீரென தன்னிடம் இருந்த வாளால் கழுத்தை அறுத்தார். அதே இடத்தில் லால் துடிதுடிக்க இறந்தார். இந்த காட்சிகள் முழுவதையும் வெளியே நின்றிருந்த மற்றொரு வாலிபன் வீடியோ எடுத்தான். பின்னர், இருவரும் ஒன்றாக இணைந்து, பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்தும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலையை செய்த வாலிபர்கள் ரியாஸ் அக்தர், கோஸ் முகமதுவை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்க, ராஜஸ்தான் முழுவதும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் ஒரு மாதத்துக்கு 144 தடை உத்தரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்த கொலை சம்பவத்தை பயங்கரவாத நிகழ்வாக கருதி தேசிய பாதுகாப்பு முகமை விசாரணைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொலையாளிகளுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொலையாளிகளில் ஒருவர் வெல்டிங் கடையில் வேலை பார்த்து வந்தார். மற்றொருவர் உதய்பூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

 கைதான இருவருக்கும் பாகிஸ்தானின் கராச்சியை தளமாக கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தாவத்-இ-இஸ்லாமி என்ற அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. முகமது ரியாஸ் அன்சாரி பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்தவர். அவரது மொபைல்போனில் சுமார் 10 பாகிஸ்தான் எண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கவுஸ் முகமது, 2014ல் கராச்சிக்கு வந்திருந்தார். கன்ஹையா லாலை கொல்வதற்கு முன், அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பான வீடியோக்களையும் பார்த்துள்ளனர். இந்த தகவலை ராஜஸ்தான் அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழு வட்டாரங்கள் தெரிவித்தன. ரியாஸ் அன்சாரி, பாகிஸ்தானை தளமாக கொண்ட தவாத்-இ-இஸ்லாம் என்ற அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார்.

மற்ற குற்றவாளி நேபாளத்திற்கு 2 முறை சென்று சில பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவனுக்கு துபாயிலும் தொடர்பு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 2 பேர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும், கைதான இந்த 2 பேருக்கும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்.யுடன் தொடர்பு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. அவர்கள் கடந்த மார்ச் 30ம் தேதி ஜெய்பூரில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளனர். அவர்கள் ஐஎஸ்ஐஎஸ்.சின் ஸ்லீப்பர் அமைப்பான அல்-சுஃபாவுடன் தொடர்பு கொண்டிருந்தனர். ஆனால், பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘இதுபோன்ற தீங்கிழைக்கும் முயற்சிகள் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ மக்களை தவறாக வழிநடத்துவதில் வெற்றி பெறாது’ என்றார்.

Related Stories: