சென்னையில் மண்டல பறக்கும்படை குழுவினரால் இதுவரை 528 ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்குட்பட்ட மாநகராட்சி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் பொது இடங்களில் கொட்டப்படும் கட்டிடக் கழிவுகளை அகற்றுதல், மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை துண்டித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் மண்டல பறக்கும் படைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது

இந்தக் குழுவினர் வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் முக்கிய சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு, மாநகராட்சி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் பொது இடங்களில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகள் ஆகியவற்றை அகற்றி, மழைநீர் வடிகால்களில் விதிகளை மீறி இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, கட்டிடக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் நபர்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கழிநீர் இணைப்பை ஏற்படுத்தியுள்ள நபர்கள் ஆகியோர் மீது அபராதமும் இக்குழுவால் விதிக்கப்பட்டு வருகிறது.

இக்குழுவினரால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ரோந்து பணியில் 15 மண்டலங்களில் 528 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 40,864 மெட்ரிக் டன் அளவிலான கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் மழைநீர் வடிகால்களில் இணைக்கப்பட்டிருந்த 94 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

எனவே மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பொது இடங்களில் கட்டிடக் கழிவுகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். மேலும், மழைநீர் வடிகால்களில் விதிகளை மீறி கழிவுநீர் இணைப்பினை இணைத்துள்ளவர்கள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

தவறும்பட்சத்தின் மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட மண்டல பறக்கும் படைக்குழுவினரால் அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும் அபராதம் செலுத்துவதை தவிர்த்திடவும் மாநகராட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: