நாகர்கோவில் காசி, 120 பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதாக ஐகோர்ட் கிளையில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல்..!

மதுரை: பாலியல் வழக்கில் கைதான நாகர்கோவில் காசி, 120 பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதாக ஐகோர்ட் கிளையில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்தது. சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களுடன் பழகி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்ததுடன், லட்சக்கணக்கில் பணம் பறித்த வழக்கில் கைதாகி உள்ள நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி (26), நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கில் மாணவிகள் உட்பட ஏராளமான இளம் பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ள காசி மீது போக்சோ வழக்கு, பாலியல் வன்கொடுமை வழக்கு, கந்துவட்டி வழக்கு என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். காசியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்பேசி, மடிக்கணினி, மெமரி கார்டு, ஆகியவற்றை ஆய்வு செய்த சைபர் கிரைம் போலீசார் அதில் இருந்து ஏராளமான ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் இந்த ஆதாரங்களை காசியின் தந்தை பாண்டியராஜன் அளித்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. தனது மகனை காப்பாற்றும் நோக்கத்தில் அவர் ஆதாரங்களை அழித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் காசியின் தந்தை தங்க பாண்டியன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இவர் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி போலீசார் கூறுகையில், ‘காசியின் லேப்டாப் மற்றும் செல்போனில் 120 பெண்களின் 1,900 அரை மற்றும் முழு நிர்வாண படங்கள் உள்ளன. மேலும் 400க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் உள்ளன. சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் இந்த படங்கள், வீடியோக்கள் ரெகவர் செய்யப்பட்டுள்ளன. இந்த படங்கள் மற்றும் வீடியோக்களை காசியின் தந்தை தங்கபாண்டி யன் அழித்துள்ளார். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என்று எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் உள்ளன. எனவே வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கின் 2வது குற்றவாளியான காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி புகழேந்தி உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும் இதே வழக்கில் மற்றொரு குற்றச்சாட்டில் அவருக்கு ஜாமீன் அளித்து, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: